ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்லப்படும் திருமணம் ஒருவருடைய வாழ்க்கையில் மிக மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அந்த திருமணம் சரியான முறையிலும், சரியான வயதிலும் ஒருவருக்கு நடைபெறாமல் ஒரு சில காரணங்களால், எத்தனையோ பரிகார பூஜைகள் எல்லாம் செய்த பிறகும் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும்.
இதனால், தீராத மனச்சோர்வும், கவலைகளும் ஏற்படும். ஒருவருடைய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் சரியாக இல்லை என்றால் இப்படியான சூழல் உருவாகும். மேலும், ஜாதகத்தில் மிக முக்கியமான வீடான இந்த ஏழாம் வீடு பாவ கிரகங்களால் பாதிக்கப்பட்டிருந்தால் அதை களத்திர தோஷம் என்று கூறுவர். இப்படி களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டு திருமணம் தள்ளிப் போகிறது என்றால் அதனை 48 நாள் பரிகார பூஜையின் மூலம் சரி செய்ய முடியும். அது எப்படி என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
ஒருவருக்கு திருமணம் தள்ளி போகிறது என்றால், 48 நாட்களுக்கு தினமும் ஒரு வாழைப்பூ வாங்கி அதில் உள்ள பூக்களை தனித்தனியாக உதிர்த்து அவற்றை ஒரு மாலையாக கோர்க்க வேண்டும். இந்த மாலையை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள பத்திரகாளி அம்மன், பிரத்தியங்காரா தேவி அல்லது வராஹி அம்மன் கோவில் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று விரைவில் திருமணம் ஆக வேண்டும் என உங்களுடைய பெயரில் அர்ச்சனை செய்து விட்டு, அம்மனுக்கு அந்த மாலையை சாற்ற வேண்டும்.

இது போன்று ஒரு நாள் கூட தவறாமல் தொடர்ந்து 48 நாட்கள் இதனை செய்ய வேண்டும். அன்றிலிருந்து 48 வது நாள் ஒன்பது கலசங்களை எடுத்துக் கொண்டு, அவற்றில் நவதானியங்களை போட்டு, அவற்றின் மீது பச்சரிசி போட்டு அதற்கு மேல் ஒன்பது வாழைப் பூக்களை வைக்க வேண்டும்.
பின்னர், அதனை கோவிலில் இருக்கும் புரோகிதரிடம் கொடுத்து கணபதி ஹோமம் அல்லது வள்ளி ஹோமம் இவற்றில் ஏதாவது ஒன்று செய்த பின்னர் ஒன்பது கலசங்களில் இருக்கும் 9 கலசங்களில் உள்ள வாழை பூக்களையும் உதிர்த்து 9 மாலைகளாக கோர்த்து அந்த மாலைகளை அதே அம்மன் கோவிலில் உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து, அம்மனுக்கு சாற்ற வேண்டும்.
அதன் பிறகு, வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையில் சமயபுரம் அருகில் அமைந்துள்ள திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோவிலுக்கு சென்று திருமண பரிகார பூஜை செய்து விட்டு வந்தால் விரைவில் திருமணம் கைகூடும்.