அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 37 தலைவர்களுக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்;
கடந்த ஜனவரி மாதம் 26-ஆம் நாள், நாட்டின் 73-ஆவது குடியரசு நாளை நாம் கொண்டாடிய வேளையில், கூட்டாட்சி மற்றும் சமூகநீதிக் கோட்பாடுகளை வென்றெடுக்க அரசியல் கட்சித் தலைவர்கள், குடிமைச் சமூகத்தின் உறுப்பினர்கள், ஒத்த சிந்தனையுள்ள தனிநபர்கள் ஆகிய அனைவரையும் ஒரு பொதுவான குடையின் கீழ் ஒன்றிணைத்து, அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு ஒன்றைத் தொடங்கவுள்ளதாக அறிவித்தேன்.
எல்லாருக்கும் எல்லாம் என்பதை அடிப்படையாய்க் கொண்டதுதான் சமூகநீதியாகும். சமூகநீதி என்பது அனைவருக்கும் சமமான பொருளாதார, அரசியல், சமூக உரிமைகளும் வாய்ப்புகளும் அமையவேண்டும் என்ற எண்ணம்தான். அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் என்பதை உறுதிசெய்வதன் வழியாகத்தான் நமது அரசியல் சட்டத்தை இயற்றியவர்கள் காண விரும்பிய சமத்துவச் சமுதாயத்தை கட்டியமைக்க முடியும்.
தமிழகத்தில், வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளிலும் சமூகநீதிக்கான விதைகளை மக்களின் மனங்களிலும் எண்ணங்களிலும் விதைத்து, தந்தை பெரியார் எனும் பகுத்தறிவுச் சுடர் ஏற்படுத்திய சமூகநீதிப் புரட்சியை இம்மண்ணின் ஒவ்வொரு துகளும் விவரிக்கும். என கடிதத்தில் தெரிவித்துள்ள முதல்வர்;
மேற்குறிப்பிட்ட குறிக்கோள்களை அடைய, உண்மையாகவே மாநிலங்களால் ஆன ஒன்றியமாக நாம் இணைந்து நிற்க வேண்டிய நேரம் இது என தான் முழுமனதாக நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். மண்டல் ஆணையத்தை அமைக்க ஒற்றுமையுடன் நாம் காட்டிய அதே உறுதிப்பாட்டையும் நோக்கத்தையும் இப்போதும் வெளிப்படுத்தியாக வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும், வாய்ப்புக்கான கதவுகள் திறக்கப்படுவதற்காக ஒடுக்கப்பட்ட சமூகங்கள் ஆவலுடன் உள்ளன.
இந்தியாவில் சமூகநீதிக் கருத்தியலை முன்னெடுத்துச் செல்வதற்கான திட்டத்தை வார்த்தெடுப்பதற்கும்; இன்னும் சிறப்பாகச் செயல்படக் கூடிய பகுதிகளைக் கண்டறிவதற்கும்; அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்குவதற்குமான தளமாக இக்கூட்டமைப்பு விளங்கும்.
ஆகவே, தங்கள் அமைப்பில் இருந்து இந்த அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்புக்கான பிரதிநிதிகளாகத் தக்க நபர்களை நியமிக்குமாறு அக்கறையுடன் கோருகிறேன். ஒடுக்கப்பட்டோருக்கு உண்மையான பொருள்பொதிந்த சமூகநீதி சென்றடைய நாம் ஒன்றுபட்டு இருந்தால்தான் முடியும்.
சமூகநீதியில் பல பத்தாண்டுகளாக நாம் அடைந்த முன்னேற்றத்துக்குப் பிற்போக்குச் சக்திகள் சவால் விடும் இந்த இடர்மிகு காலத்தில், ஒடுக்கப்பட்டோர் நலனை உறுதிசெய்ய முற்போக்கு ஆற்றல்கள் கைகோக்க வேண்டியது மிக இன்றியமையாதது ஆகும். இம்முன்னெடுப்பில், எங்களுடன் நீங்களும் இணைய உங்களை வரவேற்க நான் எதிர்நோக்குகிறேன்” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.