புதுக்கோட்டை குடிநீர் தொட்டியில் சாணம் கலக்கப்பட்டதற்கு வேங்கைவயல் சம்பவம் தொடர்பான விசாரணையின் பின்னடைவே இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற காரணம் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றச்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே, சங்கமம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குறுவாண்டான் தெரு பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வரும் குடிநீரை குடித்த பட்டியலின மக்கள் சிலருக்கு, வயிற்று வலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்டவை ஏற்பட்டதாக கூறப்பட்டதை தொடர்ந்து, குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. புகார் தொடர்பாக குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே, வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து ஒன்றரை வருடங்களை நெருங்கிய நிலையிலும், இன்றுவரை அதில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டறியப்படாத நிலையில் தான், அதுபோன்றதொரு குற்றங்கள், நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: ”எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்..” முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!
இதுபோன்ற சம்பவங்கள் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குற்றம் தொடர்பான விசாரணையில் ஏற்படும் தொய்வு, குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் ஏற்படும் தொய்வு போன்றவையே இதுபோன்ற குற்றச்செயல்கள் அதிகரிக்க காரணமாக உள்ளது.
ஆகவே, வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை விரைவில் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, சங்கமம்விடுதி ஊராட்சி பகுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாக கூறப்படும் விவகாரம் குறித்தும் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், ஒவ்வொரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளையும் 10 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்து, குடிநீரின் பாதுகாப்பு தரத்தை உறுதி செய்யும் நடவடிக்கையையும், அதனை கண்காணிக்கும் நடவடிக்கையையும் தமிழக அரசு முடுக்கிவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.