ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள வலிநிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர்.
தமிழகத்தின் ராமநாதபுர மாவட்ட கடற்கரைப் பகுதிகள் இலங்கைக்கு நெருக்கமாக அமைந்துள்ளது.
இதன் காரணமாக அவ்வப்போது தமிழகப்பகுதியில் இருந்து கடல் அட்டை, புகையிலை, தங்கம், மருந்து பொருட்கள், மஞ்சள் உள்பட பல்வேறு கடத்தப்படுகின்றன.
முக்கியமாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தலும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இலங்கையில் இருந்து ராமநாதபுரம் கடற்பகுதிக்கு தங்கம் கடத்தப்படுவதும் நடந்து வருகிறது.
இதனால், தமிழகத்தின் கடத்தல் கேந்திரமா ராமநாதபுரம் மாவட்டம் என்னும் கேள்வியும் சமூக ஆர்வலர்களிடையே எழுப்பி உள்ளது.
ஆயினும் இந்தக் கடத்தலை தடுக்க கடலோர காவல்படை, மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு பிரிவு போலீசாரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சடலமாக மீட்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகி….மாயமானவரை கொன்றது யார்?
இந்த நிலையில், இன்று வலி நிவாரணி மாத்திரைகளை இலங்கைக்கு கடத்த கொண்டு செல்வதாக குற்றப்புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் திருப்புல்லாணி பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்திய போலீசார், அவ்வழியே வந்த மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
போலீசாரைக் கண்டதும் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.
அதில் இருந்த மற்றொரு நபரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்ததில் அவர் நம்பியான் வலசையை சேர்ந்த ஸ்ரீதர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து வாகனத்தை சோதனையிட்ட போது அதில் 11 லட்சத்து 85ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் பார்சலில் கட்டி வைத்திருப்பதைக் கண்டறிந்தனர். அதன் மதிப்பு இரண்டரை கோடி ரூபாயாகும்.
இதனைத் தொடர்ந்து வாகனத்தையும், வலி நிவாரணை மாத்திரைகளையும் பறிமுதல் செய்த போலீசார், ஸ்ரீதரை திருப்புல்லாணி காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கடல் பகுதியில் இருந்து இந்த வலி நிவாரணி மாத்திரைகள் கடத்தி வரப்பட்டதாகவும், இலங்கைக்கு கடத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில், இந்த வலி நிவாரணி மாத்திரைகளுடன் சில பொருட்களைச் சேர்ந்து அதனை போதைப் பொருளாக மாற்றி விற்பனை செய்யப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்க: 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை!