கேரளாவிலிருந்து நீலகிரி(nilgiris) மாவட்டத்துக்குள் வருவோருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர் என மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்தார்.
கேரள மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினமும் 200-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்திலும் கடந்த 24 மணிநேரத்தில் 37 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்நிலையில், கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.அருணா கூறும்போது, ‘‘கேரளாவிலிருந்து நீலகிரி மாவட்டத்துக்குள் வருவோரின் உடல் வெப்ப நிலை, சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.
30 பேரின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவில், அவர்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. எனவே, கரோனா குறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை’’ என்றார்.