நான் நன்றாக உள்ளேன். முழு ஆரோக்கியத்துடன் வருவேன். முன்பு போல இயங்க முடியுமா என யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம் என வைகோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“கடந்த 25-ம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பெருமாள்புரத்தில் உள்ள தனது சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் தங்கியிருந்தபோது கால் தடுமாறி கீழே விழுந்தார் . அப்போது அவருக்கு இடது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சிகிச்சைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது.
வைகோவின் உடல்நிலை குறித்து சில விஷமிகள் தவறான செய்திகளை பரப்பி ஆதாயம் தேட அற்பத்தனமாக முயற்சிக்கிறார்கள் என மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்து இருந்தார்.
இந்த சூழலில் இந்த சூழலில் தனது உடல்நிலை குறித்து வைகோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வைகோ உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் – துரை வைகோ!
அதில் ,“அன்புள்ளம் கொண்ட தமிழ் பெருமக்களே. தமிழகத்தில் பொது வாழ்வில் ஈடுபடுகின்ற சாதாரண தொண்டன் ஆகிய இந்த வைகோ 7,000 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டுள்ளேன். ஆனால், கீழே விழுந்ததில்லை.
நான்கு நாட்களுக்கு முன்பு நெல்லையில் நான் தங்கியிருந்த வீட்டில் படி வழியாக செல்லாமல், திண்ணை மீது ஏறினேன். அப்போது இடது பக்கமாக கீழே விழுந்துவிட்டேன். தலை அல்லது முதுகு பகுதியில் அடிபட்டு இருந்தால் இயங்க முடியாமல் போயிருக்கும். இடது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
மருத்துவர்களின் ஆலோசனையின் படி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். எனக்கு தோள்பட்டை பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
நான் நன்றாக உள்ளேன். முழு ஆரோக்கியத்துடன் வருவேன். முன்பு போல இயங்க முடியுமா என யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம். எனக்காக கவலை கொண்டுள்ளவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.