தமிழகத்தில் மின்துறையில் கடன் சுமை அதிகரித்து வருவதாலும், மின் கட்டணத்தில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு வலியுறுத்தி வருவதாலும் மின் கட்டணத்தை உயர்த்துவதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார்.
இதுகுறித்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், ”கடந்த 10 ஆண்டுகளில், மின் துறையின் கடன், 12,647 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசும் வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக 28 கடிதங்கள் வந்துள்ளன. மேலும் மூன்றில் இரண்டு பங்கு நிலக்கரியை தனியாரிடமிருந்து வாங்க வேண்டும். இதனால் மின் கட்டணத்தில் மாற்றம் ஏற்படுகிறது. 42 % வீடு மற்றும் குடிசை மொத்த கட்டணத்தில் மாற்றம் இல்லை 100 யூனிட் இலவச மின்சார திட்டத்தில் மாற்றம் இல்லை. விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
200 யூனிட் வரையிலான பயனர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக வசூலிக்கப்படும். 201-300 யூனிட்டுகளுக்கு இடைப்பட்ட பயனர்களுக்கு ரூ.72.50 கூடுதல்
கட்டணம் வசூலிக்கப்படும். 301 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். 500 யூனிட்டுகளுக்கு மேல் உள்ள பயனர்களுக்கு ரூ.297.50 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். 501 யூனிட்கள் முதல் 600 யூனிட்கள் வரையிலான பயனர்களுக்கு ரூ.155 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
601 யூனிட் முதல் 700 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.275 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். 701 யூனிட் முதல் 800 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.395 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். 801 யூனிட் முதல் 900 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.565 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நுகர்வோர் 100 யூனிட் இலவச மின்சாரத்தை எழுதி வைக்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின் கட்டணம் குறித்து மக்களிடம் கருத்து கேட்டு, பின்னர் அமல்படுத்தும்,” என்றார்.
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று மிதிவண்டி வழங்கும் விழாவில் பேசிக் கொண்டிருந்தபோது மின்தடை ஏற்பட்ட பிரச்சனையில் 2 உதவி பொறியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசி கொண்டிருந்த போது மின் வெட்டு ஏற்பட்டதால், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் எரிச்சல் அடைந்தார். காட்பாடியில் உள்ள அரசு பள்ளி, மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமைச்சர் துரைமுருகன், மேடையில் பேசிக் கொண்டிருந்த போது மின் தடை ஏற்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், நந்தகுமார் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியும் மின்சாரம் வராததால், வெகுநேரமாக காத்திருந்த அமைச்சர் துரைமுருகன் எரிச்சலடைந்தார். இதையடுத்து, அவர் மிதிவண்டிகளை கொடுத்துவிட்டு, உடனடியாக வெளியேறினார்.
மேலும் அமைச்சர் பேசிக்கொண்டிருந்த போது இது போன்று நடந்ததால் விழா மேடையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் தற்போது இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு பேர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.