அதிமுக – தேமுதிக கூட்டணி | அதிமுக – பாஜக கூட்டணி முறிவிற்கு பிறகு அந்த இரு கட்சிகளுமே தனித்தனியாக கூட்டணி அமைத்து வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ள நிலையில், ஏற்கனவே அந்த கட்சிகளுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக, பா.ம.க. ஆகிய இரு கட்சிகளுக்குமான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. திமுக கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ், விசிக, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் உள்ள நிலையில் தேமுதிகவும், பாமகவும் அதிமுகவுடனும், பாஜகவுடனும் கூட்டணிப் பேச்சு வார்த்தையை தொடர்ந்து நடத்தி வருகின்றன.
தேமுதிகவை பொறுத்தவரை, அந்த இரு கட்சிகளிடமுமே 7 மக்களவை மற்றும் 1 மாநிலங்களவை தொகுதியை கேட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அதிமுகவோ தங்களிடமுள்ள எம்.எல்.ஏ.க்களின் கணக்குகளை கூட்டிக்கழித்துப் பார்த்து ஆரம்பத்திலேயே ‘நோ’ சொல்லி விட்டதால், மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனக் கருதப்படும் பா.ஜ.க.வோடு தேமுதிக கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக நம்பப்பட்டு வந்தது. இந்நிலையில்தான், கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்தனர் அதிமுக தேர்தல் பேச்சுவார்த்தைக்குழு தலைவர்கள்.
முன்னால் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் பிரேமலதா, சுதீஸ் உள்ளிட்ட தலைவர்களுடன் கூட்டணி குறித்து பேசினர். இந்நிலையில்தான் நாளை 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடக்கவிருப்பதாகவும் அப்போது அதிமுக – தேமுதிக கூட்டணி கையெழுத்தாக வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதையும் படிங்க: அதிரடி முடிவெடுத்த திருமா..! திமுகவுக்கு நெருக்கடியா..?
இது குறித்து தேமுதிக தலைமைக்கு நெருக்கமான சிலருடன் பேசினோம் நாம். “அது அதிமுகவோ அல்லது பாஜகவோ ஆரம்பத்தில் கள்ளக்குறிச்சி, விருதுநகர், கடலூர், விழுப்புரம், திருச்சி, கிருஷ்ணகிரி மற்றும் மதுரை ஆகிய 7 தொகுதிகளை கேட்டுப் பெறுவதில் உறுதியாக இருந்தோம். தற்போது, அடுத்த சட்டமன்ற தேர்தலையும் மனதில் வைத்து அதிமுகவுடன் கூட்டணி வைக்க கிட்டத்தட்ட முடிவாகி இருக்கிறது. மொத்தம் 4 தொகுதிகளை தேமுதிகவிற்கு ஒதுக்க அதிமுக முன் வந்திருக்கிறது. அதற்கு தேமுதிகவும் ஒப்புக்கொண்டுள்ளது என்றே கூற வேண்டும். அதில், கிருஷ்ணகிரி, விருதுநகர் ஆகிய 2 தொகுதிகளும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கடலூர், திருச்சி ஆகிய தொகுதிகள் நாளை முடிவாகும் நிலையில் உள்ளன” என்றனர் அவர்கள்.(அதிமுக – தேமுதிக கூட்டணி)
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1764972997486813275?s=20
ஏற்கனவே கள்ளக்குறிச்சி தொகுதியில் எல்.கே.சுதீஷ் போட்டியிட முடிவெடுத்திருந்ததாகவும், தற்போது சில காரணங்களால் இந்த பாராளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிட போவதில்லை எனவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் ஒருவேளை பாமக வரும் பட்சத்தில், அதே கள்ளக்குறிச்சி தொகுதியை பாமகவும் தங்களின் விருப்ப பட்டியலில் வைத்திருப்பதால், கள்ளக்குறிச்சி தொகுதிக்கு பதிலாக திருச்சியை கேட்டிருக்கிறதாம் தேமுதிக. தற்போதைக்கு ராஜ்யசபா தொகுதி தருவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
ஒருவேளை மேலே கூறியபடி நாளை அதிமுக – தேமுதிக கூட்டணி கையெழுத்தாகும் நிலையில் விருதுநகர் தொகுதியில் பிரேமலதாவோ அல்லது அவரின் மகன் விஜய பிரபாகரனோ போட்டியிடலாம் எனவும் கூறுகிறார்கள் தேமுதிக வட்டாரத்தை சேர்ந்தவர்கள்.