தனக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வந்தாலும், அதிமுக-வில் ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் தொடர்வதால் அதிமுக தனது முழு கட்டுப்பாட்டில் வரும் என என ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈபிஎஸ் – ஓபிஎஸ் மோதல்:
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தற்போது இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் உட்கட்சி நிகழ்வுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே எடப்பாடி பழனிசாமுக்கு எதிராக போர் கொடி தூக்கி உள்ளார் முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமாக இருந்த ஓ.பன்னீர்செல்வம். நீதிமன்றம் வரை சென்றும் பொதுக்குழுவை நிறுத்த முடியாத நிலையில், தற்போது வரை போராடிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக சபாநாயகர் செயல்பட்டது எடப்பாடி பழனிசாமி தரப்பை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது. கட்சியின் அதிகாரம் இருந்தும் ஓபிஎஸ்ஸை சட்டமன்றத்தில் எதிர்கட்சி துணைத் தலைவராக சந்திக்க விரும்பாத எடப்பாடி பழனிசாமி அதன் காரணமாகவே கூட்டத் தொடரை புறக்கணித்ததோடு, போராட்டத்திலும் ஈடுபட்டுக் கைதானார். மேலும் திமுக ஓபிஎஸ்க்கு ஆதரவாக இருப்பதாகவும் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறார்.
ஒருங்கிணைப்பாளர் இந்நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் தானே இருப்பதாகவும், விரைவில் அதிமுக தனது கட்டுப்பாட்டுக்குள் வரும் என தனது ஆதரவாளர்களிடம் கூறி வருகிறார். காரணம் தேர்தல் ஆணையத்தின் குறிப்புகளின் படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தற்போது வரை ஓபிஎஸ்ஸே தொடர்கிறார். அதனடிப்படையிலேயே சபாநாயகர் அப்பாவு சட்டசபையில் எதிர் கட்சி துணை தலைவராக அங்கீகரித்தார் என்பட்ஜையும் சுட்டிக் காட்டுகின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.
டெல்லி ஆதரவுடன் ஓபிஎஸ்?:
டெல்லி ஆதரவு அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புகளும் செல்லாது எனக் கூறுவதோடு, நீதிமன்ற தீர்ப்பும் தங்கள் தரப்புக்கே ஆதரவாக வரும் என தகவல்களை கசிய விட்டு வருகின்றனர். பாஜகவின் ஆதரவும் ஓபிஎஸ்ஸுக்கே இருக்கும் நிலையில், அடுத்து நடப்பது என்னவாக இருக்கும் என அதிமுக தொண்டர்கள் பலத்த ஆவலுடன் உள்ளனர். இன்னும் சில நாட்களுக்குள் நீதிமன்ற தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், தற்போதிருந்தே இரு தரப்பு தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் ஓபிஎஸ்ஸின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாவது உறுதி. ஆனால் எது எப்படி எனினும் தங்கள் தரப்புக்கே சாதகமாக தீர்ப்பு வரும் என ஓபிஎஸ் தரப்பு உறுதியாக நம்புகிறது. ஒருவேளை தீர்ப்பு மாறி வந்தாலும் தேர்தல் ஆணையம் தான் கட்சிகளின் அங்கீகாரம் தொடர்பாக முடிவெடுக்கும் என்பதால் டெல்லி ஆதரவோடு தேர்தல் ஆணையத்திலும் போராட முடிவு செய்து இருக்கிறார். எது எப்படி எனினும் நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு அதிமுகவில் அதிகாரம் செலுத்தப் போவது யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் என்கின்றனர்.