பஞ்சாப்பில் பிரதமர் மோடியின் தரைவழி பயணத்தின்போது போராட்டக்காரர்கள் இடைமறித்து போராடியதால் அவர் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு விமான நிலையத்திற்கு சென்ற நிலையில், அந்த போராட்டக்காரர்கள் கூட்டத்தில் பாஜக கொடியோடு பிரதமரின் பாதுகாப்பு படை அருகே சிலர் நெருங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 5 ஆம் தேதி பஞ்சாப்பில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு செல்வதற்காக பிரதமர் மோடி சென்றிருந்தார். ஹெலிகாப்டர் மூலமாக செல்வதாக இருந்த நிலையில் கடைசி நெரத்தில், தரைவழியாக சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில், சிலர் பிரதமரின் காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் சுமார் 20 நிமிடங்கள் பிரதமரின் கார் சாலையிலேயே நிறுத்தப்பட்டது. நாடு முழுவதும் பெரிதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கூறி பிரதமர் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகள் பஞ்சாப்பில் ரத்து செய்யப்பட்டு மீண்டும் விமான நிலையம் சென்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
இந்திய வரலாற்றில் அதிக பாதுகாப்பு கொண்ட பிரதமர் என்றால் அது மோடிதான். அதி நவீன மெர்செடஸ் மேபேக்(Mercedes-Maybach) S650 கார், சிறப்பு எஸ்பிஜி பாதுகாப்பு என பிரதமர் மோடிக்கு உயர் ரக பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் அவரின் பாதுகாப்பில் பெரிய குறைபாடு இருப்பதாக கூறி பஞ்சாப்பில் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சியே கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
ஆனால் போராட்டக்காரர்களால் பிரதமரின் கார் ஸ்தம்பித்ததாக கூறப்படும் அந்த இடத்தில் ஒரு பெரிய பாஜக கொடியோடு கூட்டத்திற்கு இடையே சிலர் `மோடி ஜிந்தாபாத்’ என்று கோஷம் எழுப்பி அவருடைய காருக்கு அருகே நெருங்கி செல்கின்றனர்.
Those who could get closer to #PMModi 's cavalcade during his Punjab visit. https://t.co/nInoRj8cuH pic.twitter.com/a3ASKTwOQ9
— I P Singh (@ipsinghTOI) January 7, 2022
இந்த வீடியோ வெளியாகி பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பாதுகாப்பு குறைபாடு யாரால் ஏற்பட்டது. பாஜக கொடியோடு சிலர் செல்லும் நிலையில், பிரதமருக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது பாஜகவினரால் தானா என கேள்விகள் எழுந்துள்ளது.