”சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏக்களை அஸ்ஸாமிற்கு அனுப்புவதற்கு பதிலாக மேற்கு வங்கத்திற்கு அனுப்புங்கள் நன்றாக கவனித்து அனுப்புகிறோம்” என மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்காக பாஜக பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. இதில், சிவசேனாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள எம்.எல்.ஏ-க்கள் 21 க்கும் மேற்பட்டோர் ஏக்னாத் ஷிண்டேவுடன் குஜராத்தின் சூரத்துக்கு சென்றனர்.
தற்போது அஸ்ஸாம் மாநிலத்தில் குவஹாத்தியில் உள்ள ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் தங்கியிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த ஹோட்டலுக்கு முன்பாக திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். இந்த நிலையில் தான், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில், ”ஒரு நாள் பாஜக உடைக்கப்படும்! மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இன்று நீங்கள் (பாஜக) அதிகாரத்தில் இருக்கலாம். பணத்தையும், பலத்தையும், மாஃபியாக்களையும் பயன்படுத்தலாம். ஆனால் ஒருநாள் நீங்கள் செல்ல வேண்டிய நேரம் வரும். அப்போது, யாரேனும் உங்கள் கட்சியையும் உடைக்கலாம். சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களை அஸ்ஸாமுக்கு அனுப்பியதற்கு பதிலாக, மேற்கு வங்கத்துக்கு அனுப்புங்கள். நன்றாக கவனித்து அனுப்புகிறோம்” என மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்த கவனித்து அனுப்புகிறோம் என்ற வார்த்தையை எப்படி புரிந்து கொள்வது என பலரும் குழம்பியுள்ளனர்.
இது எதையோ பொருள்ப்படுத்தி இலைமறைக்காயாக சொல்லவருகிறார் இந்த கவனிப்பிற்கு வேறு எதுவும் அர்த்தம் இருக்கிறதோ” என சமூக வலைதளங்களில் கேள்வியெழுப்பி வருகின்றனர்.