15 வது ஆசிய கோப்பை t20 தொடரின் இறுதி ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியில் இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த தருணம் இலங்கை அணியின் ரன் குவிப்பு மற்றும் பவுலிங்.
இலங்கை அணி 171 ரன்கள் குவிக்க அந்த அணியின் மத்திய வரிசை பேட்ஸ்மேன் ராஜபக்ச ஒரு முக்கிய காரணம். அந்த அணி 58 ரன்களில் 4 விக்கெட்டை இழந்து தவித்தபோது ராஜபக்ச ஹசரங்கா இணை அதிரடியாக ஆடி 36 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தது. இறுதி ஓவர் வரை விளையாடிய ராஜபக்ச 71 ரன்கள் குவிக்க அணியின் ஸ்கோர் நன்றாக உயர்ந்தது. ஆட்டத்தின் கடைசி 5 ஓவர்களில் அவர் 53 ரன்கள் விளாசினார். இதுவே அணியின் வலுவான இலக்கை அமைக்க உதவியது.
இதற்கு சற்றும் குறையாமல் பந்துவீச்சிலும் அந்த அதிரடி காட்டியது. அணிக்கு புதிதாக வந்துள்ள மதுஷன் சிறப்பாக பந்து வீசி பாகிஸ்தான் அணியின் முக்கிய விக்கேட்டானா பாபர் அசாம், ஜமான் ஆகியோர் விக்கெட்டை கைபற்றினார். மற்றொரு சுழல் பந்து வீச்சாளர் ஹசரங்கா தனது மாயாஜால பந்து வீச்சால் பாகிஸ்தான் அணியை சரித்தார்.
போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் ஷணக்கா கூறும்போது. “ ராஜபக்ச தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது அணிக்கு பலம் சேர்த்தது. உலககோப்பை போட்டிக்கு முன்னதாக ஆசிய கோப்பையை வென்றது அணிக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது. மேலும் இந்த மைதானத்தில் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி முதல் பேட்டிங் பிடித்து கோப்பையை கைபற்றியது எங்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்தது, மேலும் இது போன்ற ஆட்டத்தை வெளிபடுத்த நாங்கள் தீவிரமாக ஆலோசித்தோமென்றார்”.
அதன் பின்பு பேசிய ராஜபக்ச, “ நான் விளையாடிய சிறந்த இன்னிங்சில் இதுவும் ஒன்று, மேலும் 10 வருடங்களுக்கு முன்பிருந்த இலங்கையணியை போல செயல்பட ஆரம்பிக்கிறோம் என்றார். கடந்த காலத்தில் பெரும் துயரத்தில் தவித்த எங்கள் நாட்டு மக்களுக்கு இந்த வெற்றி ஒரு ஆறுதலாக அமையும். இந்த வெற்றியால் எங்கள் மக்கள் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது எங்களுக்கு பெருமையாக உள்ளதென்று கூறினார்”.