தமிழகத்தில் அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முடிவடைகிறது. இந்நிலையில், முததமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும நிலையில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில்; தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் ஓமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
இதில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாவட்டம் வாரியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அதிக பாதிப்புள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதோடு மாவட்ட எல்லைகளில் கண்காணிப்புகளை கடுமையாக்குவது, பரிசோதனைகளை அதிகரிப்பது, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பொங்கல் பண்டிகைகளின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும். அதேபோல், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை மேம்படுத்துவது, ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்துவது, ஆம்புலன்ஸ் வாகனங்களை அதிகரித்தல், குறிப்பாக, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது, கடைகள் செயல்படும் நேரத்தை குறைப்பது, , சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிப்பது, கடற்கரையில் பொது மக்களுக்கான கட்டுப்பாடுகள் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகி வருகிறது.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.