பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும், ஆசிரியர்கள் தினமும் பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா மூன்றாவது அலை வீசத்தொடங்கி உள்ள நிலையில், தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று, தமிழகத்திற்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதை அடுத்து, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகை பிறப்பித்துள்ள தமிழக அரசு, பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31 ஆம் தேதி வரை விடுமுறை அளித்துள்ளது. மேலும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்த தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாக, ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன்படி, அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டாலும், கல்வி தொலைக்காட்சி, மற்றும் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கான வகுப்புகள் நடத்தபட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், கற்பித்தல் பணிகளை கவனிக்கும் வகையில், தினமும் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்ற காரணத்தால், ஆசிரியர்களும் பள்ளிக்கு வராமல் இருக்கக் கூடாது என்றும் பள்ளிக் கல்வி இயக்குனரகம் அறிவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு, ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.