நேற்று தலைமன்னார், நெடுந்தீவு அருகேநடுக்கடலில் 5 விசைப் படகுகளை சிறைப் பிடித்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் 37 பேரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 37 மீனவர்களையும், சிறை பிடிக்கப்பட்ட 5 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நவடடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து எழுதியுள்ள கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது..
“மீன் பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, அவர்களிடையே மிகுந்த மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கடற்படையினரின் செயல்கள், தமிழக மீனவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்று தமிழக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, மீனவர்களின் உரிமைகளுக்காக மத்திய அரசு வலுவாக குரல் கொடுக்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
பாக். வளைகுடா பகுதியில், நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். நடப்பாண்டு அக்டோபர் மாதம்மட்டும் தமிழகத்தைச் சேர்ந்த 64 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 10 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றைத் தடுத்து நிறுத்தவேண்டும். தமிழக மீனவர்கள்தொடர்ந்து கைது செய்யப்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது.
இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கைக் கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன் பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.