தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி தமிழகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் காலை காட்சி ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நேற்று முன்தினம் இரவு மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
விஜயகாந்த் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு விஜயகாந்தின் உடல் கொண்டு செல்லப்பட்ட நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். அத்துடன் விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் விஜயகாந்த்தின் உடல் அவரது வீட்டில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களின் அஞ்சலிக்காக இன்றும், நாளையும் அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு நாளை மாலை 4.45 மணிக்கு விஜயகாந்த்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இந்த நிலையில் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி தமிழகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் காலை காட்சி ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தனியார் சேனலுக்கு பேட்டியளித்துள்ள அவர், விஜயகாந்த் மறைவு சினிமா உலகத்துக்கு பேரிழப்பு. ஹீரோவுக்கும் லைட்மேனுக்கும் அதே உணவு என்ற முறையை கொண்டு வந்தவர். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று தமிழ்நாடு முழுவதுமுள்ள திரையரங்குகளில் காலை காட்சி ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.