ஒரு நாட்டு குடிமக்கள் மற்றறொரு நாட்டிற்குள் செல்ல விசா தேவை. அதன்படி, சில நாடுகளுக்கு செல்வதற்கு எளிதாக விசா பெற்றுவிடலாம்.
மேலும், ஒரு சில நாடுகளுக்கு அங்கு சென்ற பிறகு கூட விசா பெற்றுக்கொள்ளலாம். அப்படி எளிமையான விசா அணுகுமுறைகளை கடைப்பிடிக்கும் நாடுகள் இருக்கின்றன. அதேசமயம் கடுமையான விசா நடைமுறைகளைப் பின்பற்றும் சில நாடுகளும் உள்ளன.
அந்தவகையில் தாய்லாந்து, இந்தோனேசியா, மாலத்தீவு மற்றும் இலங்கை போன்ற ஆசிய நாடுகளுக்கு இந்தியர்கள் ‘விசா-ஆன்-அரைவல்’ முறையில் பயணிக்கலாம். அதாவது, விசா இல்லாமல் அந்த நாட்டிற்கு சென்ற பின்னர் விசா எடுத்துக் கொள்ளலாம் என்ற முறை நடைமுறையில் இருந்தது.
இந்நிலையில், தற்போது இந்தியாவில் இருந்து இலங்கை செல்ல இனி விசா தேவை இல்லை என்று இலங்கை அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியர்கள் இலங்கைக்கு விசா எடுக்காமல் சென்று வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியா மட்டுமல்லாமல், சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய 6 நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் அமைச்சரவை ஒப்புதலுடன் மார்ச் 31 தேதி வரை சோதனை முயற்சியாக அமல்படுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.