ராசிபுரம் அருகே 100 அடி ஆழ கிணற்றில் விழுந்த பள்ளி மாணவர் 3 பேரை மீட்க சென்ற தந்தை உள்பட 4 பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கணவாய்பட்டியை சேர்ந்த குப்புசாமி மகன் அபினேஷ், (15) 10ம் வகுப்பு, கம்மாளப்பட்டி கண்ணன் மகன், நித்தீஷ்குமார், (15)10ம் வகுப்பு, சமத்துவபுரம் பொன்னுசாமி மகன், விக்னேஷ்,(9)7ம் வகுப்பு ஆகிய 3 பேரும், அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில், விடுமுறை நாளான இன்று மதியம், ‘டிவிஎஸ்’ XL இருசக்கர வாகனத்தில் 3 பேரும் சென்றனர்.
இருசக்கர வாகனத்தை அபினேஷ் அதிவேகமாக ஓட்டி வந்த போது நிலை தடுமாறி சாலையோரம் உள்ள விவசாயி ரமேஷ் என்பவரது 100 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்தனர். அவர்களுக்கு பின்னால் வந்த சரவணன், 35, குப்புசாமி, 58, கணவாய்பட்டியை சேர்ந்த அசோக்குமார், 38, ஆகியோர் அதிர்ச்சி அடைந்து மாணவர்களை காப்பாற்றும் நோக்கில் கிணற்றுக்குள் குதித்தனர்.
அதில் அபினேஷ் கிராம மக்கள் கயிற்று கட்டில் உதவியுடன் மேலே தூக்கி ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நித்தீஷ்குமார் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், விக்னேசை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, குப்புசாமி, அசோக்குமார், சரவணன் ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 3 மணி நேரமாக போராடி 4 பேர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக, ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றில் விழுந்த பள்ளி மாணவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட, மூன்று பேர், பள்ளி மாணவர் ஒருவர் என, நான்கு பேர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தகவல் அறிந்த நாமக்கல் கலெக்டர் உமா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இருசக்கர வாகனம் கிணற்றில் விழுந்ததில் வாகனத்தில் இருந்து பெட்ரோல் கசைவு ஏற்பட்டு 4 பேர் மூச்சு திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களுக்கு தலா 5000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்கள்.