வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட, வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் வசித்து வரும் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று, வால்பாறை சிறுகுன்று எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் நுழைந்துள்ளது.
அப்போது தனது வீட்டினருகே விளையாடிக் கொண்டிருந்த மர்தீப் என்ற 7 வயது சிறுவனை அந்த சிறுத்தை பலமாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த சிறுவன் வலி தாங்க முடியாமல் அலறித் துடித்துள்ளார். சத்தம் கேட்டு அங்கு திரண்ட அப்பகுதி மக்கள் சிறுத்தையை விரட்டி துரத்தினர்.
சிறுத்தை தாக்கியதில் தலை மற்றும் உடலில் நகக்கீறல்கள் காரணமாக பலத்த காயமடைந்த சிறுவனை மீட்ட மக்கள் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், சிறுத்தையை கண்காணித்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு முதற்கட்ட நிவாரண தொகையாக ரூ.10 ஆயிரத்தை, வனத்துறையினர் பெற்றோரிடம் வழங்கினர்.