அதிமுக வேட்பாளரை திமுகவினர் கடத்தி வைத்துள்ளதாக கூறி முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது.
இதற்காக கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கிய வேட்புமனுத்தாக்கல் 4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் ஒன்பதாவது வார்டு அதிமுக வேட்பாளரை திமுகவினர் கடத்தி வைத்து வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டுவதாக கூறி முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் கட்சியினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் 18 வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
9வது வார்டில் தி.மு.க., சார்பில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் கிருஷ்ணவேணியும், அ.தி.மு.க., சார்பில் இந்திராணியும் நேரடியாக போட்டியிடுகின்றனர்.
திமுகவினர் வேட்பாளரை போட்டியின்றி அன்னபோஸ்ட் ஆக தேர்வு செய்ய அதிமுக வேட்பாளரை திமுகவினர் கடத்தி வைத்துள்ளதாகவும் வாபஸ் வாங்க சொல்லி, மிரட்டுவதாகவும் கூறி முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அக்கட்சியினர் வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போன்று நகர்புற உள்ளாட்சி தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில், இலுப்பூர் பேரூராட்சியின் 3-வது வார்டில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் செல்வம் என்பவரை சக வேட்பாளர் லட்சுமணன் கடத்திவிட்டதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 3 தினங்களாக லட்சுமணன் செல்வத்திடம் போட்டியில் இருந்து விலகும்படி வற்புறுத்தியதாகவும், அதற்கு செல்வம் மறுத்துவிட்டதால் அவரை கடத்திவிட்டதாகவும் செல்வத்தின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.