ஆப்கானிஸ்தான் நாட்டில், அனைத்து பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில், விரைவில் மாணவிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில், அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, தலிபான்களின் தற்காலிக அரசு அமைக்கப்பட்டு ஆட்சி நடைபெற்று வருகிறது.
இதனை அடுத்து ஆப்கானிஸ்தானில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு பெண்கள் செல்ல தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை தலிபான்களின் தற்காலிக அரசு அறிவித்தது.
இதற்கு அந்நாட்டு பெண்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பெண்களின் உரிமைகள் மீறப்படுவதாகவும் கல்வி, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்றும் உலக நாடுகள் வலியுறுத்தின.
இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு, தலிபான் அரசின் முக்கிய துறையின் செய்தித் தொடர்பாளர் சயீது கோஸ்டி பேட்டி அளித்துள்ளார்.அதில் விரைவில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் என, அனைத்திலும் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் பெண்கள் ஆசிரியப் பணி செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்த அவர் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.