பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று நடந்த குண்டுவெடிப்பில் 34 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பலுசிஸ்தானில் இன்று ஈத்-இ-மிலாத்-உன்-நபி பெருநாள் ஊர்வலத்திற்காக மக்கள் கூடியிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள மசூதி அருகே இன்று வெள்ளிக்கிழமை (29.09.2023) தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதில் 34 பேர் உயிரிழந்தனர். மேலும், 130 பேர் காயமடைந்தனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பலுசிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில், நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைக் கொண்டாட மக்கள் கூடியிருந்த இடத்தில், பயங்கர சத்தத்துடன் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பலுசிஸ்தானின் மாகாண நிர்வாகம் தெரிவித்திருப்பதாவது..,
பாதிக்கப்பட்டவர்களில் மஸ்துங்கின் டிஎஸ்பி நவாஸ் காஷ்கோரியும் ஒருவர். குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சை தேவைப்பட்டால், அவர்கள் கராச்சி மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள்.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முழுப் பொறுப்பையும் அரசு ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து பலுசிஸ்தானின் தகவல் அமைச்சர் ஜான் அச்சக்சாய் கூறுகையில்..
“பலுசிஸ்தானில் உள்ள மத இடங்களை குறிவைத்து நமது எதிரிகள் வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் அமைதியை சீர்குலைக்க நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார்.
இதனிடையே, இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தானில் உள்ள அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுவரை இந்து குண்டுவெடிப்புக்கு சம்பவத்துக்கு யார் காரணம் என்பது தெரியவில்லை. பாகிஸ்தான் தலிபான் தங்களுக்கும், இந்த குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இல்லை என்று மறுத்தது அறிக்கை வெளியிட்டுள்ளது.
முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், ஏற்பட்ட ஒரு குண்டுவெடிப்பில் ஜமியத் உலமா-இ-இஸ்லாம் ஃபஸ்ல் (JUI-F) தலைவர் ஹபீஸ் ஹம்துல்லா உட்பட பலர் காயமடைந்தனர். இந்நிலையில், செப்டம்பர் மாதத்தில் மஸ்துங் மாவட்டத்தில் நடந்த இரண்டாவது பெரிய குண்டுவெடிப்பு சம்பவம் இதுவாகும்.