நடிகை சமந்தா தனது மருத்துவ சிகிச்சைக்காக பிரபல ஹீரோ ஒருவரிடம் இருந்து ரூ.25 கோடி கடன் வாங்கியிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகை சமந்தாவுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டில் ஆட்டோ இம்யூன் நோயான மயோசிடிஸ் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், சமீபத்திய ஆண்டுகளில் பல சவால்களை எதிர்கொண்டார். முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் விவாகரத்து உட்பட அடுத்தடுத்து பல சிக்கல்களை எதிர்கொண்டார்.
கடந்த வருடம் மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அடுத்தடுத்த தான் நடிக்கவிருந்த படங்களுக்காக தயாரிப்பாளர்களிடமிருந்து பெற்ற முன் பணத்தையும் திருப்பி அளித்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது விடுமுறையை கழிக்க சமந்தா இந்தோனேஷியாவில் உள்ள பாலி என்ற தீவுக்கு தனது தோழியும் மேக்கப் கலைஞருமான அனுஷா சுவாமி என்பவருடன் சென்றிருக்கிறார். அங்கே அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
இதற்கிடையே, நடிகை சமந்தா தனது மருத்துவ செலவுக்காக பிரபல தெலுங்கு ஹீரோவிடமிருந்து ரூ.25 கோடி கடன் வாங்கியதாகவும், ஆனால், அந்த நடிகர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை என்றும் சாக்ஷி என்ற தெலுங்கு சேனல் ஒன்றில் செய்தி வெளியானது.
அதோடு, பாலி சென்று திரும்பிய பிறகு நடிகை சமந்தா சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் என்ற தகவலும் அந்த சேனலில் வெளியானது. இந்த நிலையில், தற்போது அந்த பரபரப்பு செய்திக்கு நடிகை சமந்தா விளக்கமளித்திருக்கிறார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில்,
“மயோசிடிஸ் சிகிச்சைக்காக ரூ.25 கோடியா? யாரோ ஒருவர் உங்களுக்கு மோசமான ஒப்பந்தத்தை அளித்திருக்கிறார்கள். அதில் நான் மிக மிக குறைவான தொகையைத் தான் செலவழித்துக் கொண்டிருக்கிறேன். என்னால் என்னை பார்த்துக்கொள்ள முடியும். நன்றி.
மயோசிடிஸால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் அதன் சிகிச்சை முறை குறித்து தகவல் வெளியிடும்போது பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.