“INDIA கூட்டணியை பார்த்து ஊழல்வாதிகளின் கூட்டணி என குற்றம்சாட்டும் பிரதமர் மோடி, உங்கள் ஆட்சி குறித்த சிஏஜி அறிக்கையை படித்துப் பார்த்தீர்களா?”Speaking for India Podcast மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை பின்வருமாறு:
இந்த Speaking for India பாட்காஸ்ட்டின் முதல் எபிசோடுக்குப் பிறகு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடக்கம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா தொடக்கம் ஆகியவற்றை முடித்துவிட்டு, இப்போது உங்களிடம் பேசுகிறேன்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கிய உடன், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு தாய்மார் கேட்கிற மாதிரியான பதிவு அது, “எங்க முதல்வர் சொன்ன ஆயிரம் ரூபாய் வந்தாச்சு, பிரதமர் சொன்ன 15 லட்சம் என்னாச்சு?” இது தமிழ்நாட்டில் வைரல் ஆகிவிட்டது.நம்முடைய நாடும் நாட்டு மக்களும் மீண்டும் பா.ஜ.க.விடம் ஏமாந்துவிடக் கூடாது என்றுதான் இந்த Speaking For India பாட்காஸ்ட் சீரிஸ்-ஐ தொடங்கியிருக்கிறேன்.
2014-ஆம் ஆண்டு ஏமாந்தது போல்-
2019-ஆம் ஆண்டு ஏமாந்தது போல்-
2024-ஆம் ஆண்டும் நாடு ஏமாந்துவிடக் கூடாது.
2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்புகுஜராத் மாநிலத்தை முன்னேற்றி, அங்கே தேனாறும், பாலாறும் ஓடுவதுபோல பொய்ச் செய்திகளை பரப்பி, அதன் மூலமாக, தன்னை வளர்ச்சியின் நாயகனாக காட்டிக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.
“60 ஆண்டுகள் இந்தியாவை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்திருக்கிறது. எனக்கு 60 மாதம் கொடுங்கள். நான் இந்தியாவை வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றுவேன்” என்று சொன்னார் மோடி அவர்கள். அவருக்கு 60 மாதம் மட்டுமில்லை, கூடுதலாக, இன்னொரு 60 மாதம் ஆட்சி செய்கிற அளவிற்கு வாய்ப்பை இந்திய மக்கள் வழங்கினார்கள். வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றிவிட்டாரா? என்பதுதான் அவர் பதில் சொல்ல வேண்டிய கேள்வி. எந்த வகையில் எல்லாம் இந்தியாவை வளர்த்திருக்கிறார் என்று பட்டியல் போட அவரால் முடியுமா?
5 T-தான் எனக்கு முக்கியம் என்று முதல் முறை பிரதமர் ஆனபோது நரேந்திரமோடி அவர்கள் சொன்னார்.
- Talent – திறமை,
- Trading – வர்த்தகம்,
- Tradition – பாரம்பரியம்,
- Tourism – சுற்றுலா,
- Technology – தொழில்நுட்பம்
- இந்த 5 T-யில் ஒன்றாவது நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? என்னைப் பொறுத்தவரையில், 5 C-க்கள் கொண்டதாகத்தான் இன்றைய பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது.
- Communalism- வகுப்புவாதம்,
- Corruption – ஊழல் முறைகேடுகள்,
- Corporate Capitalism – மூலதனக் குவியல்,
- Cheating – மோசடி,
- Character Assassination – அவதூறுகள்
இந்த 5 C-க்கள் கொண்ட ஆட்சி இது. இப்படித்தான் சொல்ல முடியும். இதை இதுவரை விளம்பர வெளிச்சங்கள் மூலமாக பா.ஜ.க. மறைத்து வந்தது. ஆனால் இப்போது உருவான இந்தியா கூட்டணியும், இந்தியா கூட்டணித் தலைவர்களின் பரப்புரையும் பா.ஜ.க. கட்சியின் பிரதமர் நரேந்திர மோடி என்ற பிம்பத்தை முகத்திரையை கிழித்துவிட்டது.இதை நாங்கள் அரசியலுக்காக சொல்லவில்லை. உண்மையான தரவுகளின் அடிப்படையில்தான் சொல்கிறோம் என்று சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்திவிட்டது. இந்தியா கூட்டணியைப் பார்த்து ஊழல்வாதிகளின் கூட்டணி என்று குற்றம் சாட்டுகிற மோடி அவர்களே!
உங்கள் ஆட்சியைப் பற்றி சி.ஏ.ஜி. அறிக்கை என்ன சொல்லியிருக்கிறது என்று படித்துப் பார்த்தீர்களா? இதைப் பற்றி சிறப்புக் கூட்டத் தொடரில் விவாதித்தீர்களா? இல்லை பதில் சொன்னீர்களா?அயோத்தியா திட்டத்தில்கூட ஊழல் செய்த கட்சிதான் பா.ஜ.க. என்று சி.ஏ.ஜி. அறிக்கை சொல்லியிருக்கிறது. எல்லாத் திட்டங்களுக்கும், நம்முடைய வாய்க்குள் நுழையாத பெயராகப் பார்த்து வைப்பார்கள். அப்படி வைத்தால்தான் அதில் என்ன நடக்கிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
அதாவது இராமாயணம் நடந்த இடங்களுக்கு எல்லாம் பயணிகளை அழைத்துச் செல்லும் சுற்றுலாத் திட்டம் அது. இதை உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், கோவா, தெலங்கானா ஆகிய 6 மாநிலங்களில் செயல்படுத்தப் போவதாக சொன்னார்கள்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்தியதில், பல கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி. குற்றம் சாட்டி இருக்கிறது. ஒப்பந்தம் வழங்கியதில் எத்தகைய விதிமீறல்கள் இருக்கிறது என்று இந்த அறிக்கை சொல்லியிருக்கிறது
எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் சேலம், தஞ்சாவூர், இராமநாதபுரம், வேலூர் நகரங்களுக்கு உதான் திட்டத்தில் விமான சேவை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால், திட்டமிடப்பட்ட இந்த 4 நகரங்களில் சேலத்திற்கு மட்டும்தான் உதான் திட்டத்தில் விமானம் இயக்கப்பட்டது. அதுவும் இப்போது இல்லை. மொத்தமாக அறிவிக்கப்பட்ட 774 வழித்தடங்களில் 720 வழித்தடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படவில்லை என்று சி.ஏ.ஜி அறிக்கை சொல்லியிருக்கிறது.