சென்னையில் மாடு முட்டியதில் படுகாயமடைந்த முதியவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த சில நாட்களாகவே சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரியும் மாடுகள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
சென்னை திருவல்லிக்கேணியில் கடந்த 18 ஆம் தேதி சுந்தரம் என்ற முதியவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை மாடு முட்டி தூக்கி எறிந்தது.
மாடு முட்டி தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த முதியவர் சுந்தரம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மாடு முட்டியதில் படுகாயமடைந்து தொடர்ந்து 10 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்த முதியவர் சுந்தரம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் ஆவடியை அடுத்த பட்டாபிரான் சோராஞ்சேரி பகுதியில் வீட்டு வாசலில் நின்று குழந்தைக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்த பெண்ணை மாடு முட்டி தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.