வருகிற ஏப்ரல்17ம் தேதி முதல் 28ம் தேதி வரை அரசுப் பள்ளி (government schools) மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடத்தப்படவேண்டும் எனவும் அந்த பேரணியில், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களும் பங்குபெற வேண்டும் எனவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள அந்த சுற்றறிக்கையில்..
“இன்றைய மாணவர்களே நாட்டின் எதிர்கால தூண்கள். மாணவர்களின் வகுப்பறை சூழல் சுமையானதாக இல்லாமல், இனிமை உடையதாகவும், ஒவ்வொரு நாளும் என்ன புதுமை வகுப்பறையில் நிகழ உள்ளதோ என்ற எதிர்பார்ப்பில் பள்ளியை நோக்கி மாணவர்கள் வருவதற்கும், எத்தகைய அசாதாரண சூழலையும் எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்களாக மாணவர்களை உருவாக்கும் இடமாக பள்ளிகள் இருக்க வேண்டும். பள்ளிப் பருவத்தில் அதற்குண்டான பயிற்சிகள் படிப்புடன் கூடிய செயல்பாடாக ஒவ்வொரு பள்ளியிலும் அமைவது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் சில தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 3ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இப்பள்ளிகளில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
இதற்காக, ஏப்ரல் 17ம் தேதி முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை அரசுப் பள்ளி (government schools) மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட வேண்டும். குறிப்பாக மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி மாணவர் எண்ணிக்கையை இந்தக் கல்வியாண்டில் உயர்த்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.