ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளின் செயல்பாடுகளுக்கு மத்தியில் தனியாக கவனிக்கப்படுவது அதிமுகவின் செயல்பாடுகள் தான். காரணம், அதிமுகவின் 2 அணிகளுக்குள் நடக்கும் களேபரங்கள் தான். அது சார்ந்த புதிய தகவலாக, “நிர்வாகிகளிடம் கெஞ்சும் எடப்பாடியார்; பாஜகவை பயன்படுத்த நினைத்து அதில் மாட்டிக்கொண்ட பன்னீரார்” என சில செய்திகள் எம்.ஜி.ஆர் மாளிகையில் இருந்து அரசியல் வட்டார வீதிகளில் கசிந்துள்ளது.
நிர்வாகிகளிடம் கெஞ்சிய எடப்பாடியார்.!?
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும் வேட்பாளரை நிறுத்தப்போவதாக கூறியுள்ள நிலையில், இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பதால் போட்டியிட யாரும் முன்வரவில்லை. அதே நேரத்தில், ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்கவே கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி அணியினர் தீவிரமாக இருக்கின்றனர். இந்நிலையில், வேட்பாளராக யாரை நிறுத்தலாம்? இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? சின்னத்தை தேர்தல் கமிஷனில் கேட்டு பெறுவது எப்படி? என்பது குறித்து ஆலோசனை நடத்த, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாஜி அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து சேலம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு தம்பிதுரை எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திரபாலாஜி, கே.பி.முனுசாமி, இசக்கி சுப்பையா, காமராஜ், கே.பி.அன்பழகன், செல்லூர் ராஜூ, எம்.சி.சம்பத், சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, பெஞ்சமின், ஆர்.பி.உதயகுமார், வேலுமணி, செங்கோட்டையன் ஆகியோர் வந்தனர். அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது. இடைத்தேர்தலில் வேட்பாளராக யாரும் போட்டியிட முன்வராததால் “யாராவது நில்லுங்கப்பா, செலவுகளை நாங்களே ஏற்கிறோம்” என்று எடப்பாடி தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து தான், முதலில் சாதாரணமாக கேட்கும்போது போட்டியிட ஒப்புக்கொள்ளாத முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், தேர்தல் செலவுகளை கட்சியே ஏற்றுக்கொள்ளும் என கூறியதையடுத்து சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடந்து வரும் நிலையில், வேட்பாளரை அறிவிக்க தயாராகியுள்ளது இ.பி.எஸ்., அணி.
‘இரட்டை இலை’ முடக்கமும் இ.பி.எஸ்-ன் நிலைப்பாடும்!
யாரும் போட்டியிட முன்வராததுக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, நிர்வாகிகள் மத்தியில் நிலவும் “இரட்டை இல்லை கிடைக்குமா கிடைக்காதா” என்ற எண்ணம் தான். ஆனால், அதே நேரம் இங்கு ‘இரட்டை இலை’ சின்னத்தை மையப்படுத்திய தகவல்களை பொறுத்தவரை ஏற்கனவே இரட்டை இலையை முடக்க பன்னீர் முயற்சிக்கிறார் என வாய்ச்சொல்லாக சொல்லப்பட்ட நிலையில், ஊடகத்தின் முன் பேசிய பன்னீர்செல்வமோ ‘இரட்டை இலை முடங்க நான் காரணமா இருக்க மாட்டேன், படிவத்தில் கையெழுத்திட தயார், ஒன்றிணைந்து பணியாற்றுவதே எண்ணம்’ என்றெல்லாம் பேசினார். ஆனால் அதே நேரம், ‘தனித்து போட்டி, பாஜக ஆதரவு’ என குழப்பவும் செய்தார்.
இப்படி சின்னத்தை மையப்படுத்தி குழப்ப நிலை நீடிக்கும் நிலையில், ‘ஒன்றிணையும் எண்ணமே இல்லை’ என்ற நிலைப்பாட்டில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியோ, ”சின்னம் கிடைத்தாலும் ஓகே, சின்னத்தை முடக்கினாலும் ஓகே…” என்ற நிலைப்பாட்டில் இருக்கிறாராம். இங்கு அவருடைய வியூகம் என்னவென்றால், “சின்னம் கிடைத்தால் அதில் நின்று போட்டியிடுவோம்; சின்னத்தை முடக்கினால் ஓ.பி.எஸ்-ம், பாஜகவும் சேர்ந்து சின்னத்தை முடக்கி விட்டார்கள் என்ற பிரச்சாரத்தோடு போட்டியிடுவோம்” என சொல்றாங்க. இங்கு மற்றுமொரு கவனிக்கத்தக்க விஷயம், பாஜக என்ற சுமையை இந்த தேர்தலில் இருந்து இறக்கி வைக்கும் மன ஓட்டத்தில் இருக்கிறாராம் இ.பி.எஸ்… இது எல்லாம் அவர் வட்டார தகவல்களே…!
‘ரிவீட்’ அடித்த ஓ.பி.எஸ்-ன் பிளான்!
ஓ.பி.எஸ் தரப்பின் நிலையை பொறுத்தவரை, தேர்தல் போட்டி, சின்ன பிரச்சனை என ‘பாஜகவை வைத்து எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கலாம்’ என நினைத்த ஓ.பி.எஸ்-க்கு அந்த பிளான் ரிவீட் ஆகி, ‘பன்னீரை வைத்து எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கும் பாஜகவின் பிளானாக’ மாறி விட்டது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. இப்படி 2 அணியுமே தேர்தல் பிரச்சனைகளுக்கு முன்னதாக தங்களை நிலையாக வைத்துக் கொள்வதிலேயே பல தடங்கல்களை சந்தித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஜெயிப்பது சேலத்து சேவலா? தேனி சேவலா?
மொத்தத்தில் இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் சேவல்களுக்கு இடையில் நடக்கும் சண்டையை பாஜக, மத்தியஸ்தராக ஊக்குவித்து பயன்படுத்திக்கொள்ள, இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என்ற களம் எண் 8-ல் பலத்தை காட்டும் சேவல் தான் அதிமுக என்ற ‘கப்’பை தட்டிட்டு போகும்னு தாராளமாக நம்பலாம். பொறுத்திருந்து பார்க்கலாம் ஜெயிப்பது சேலத்து சேவலா? இல்லை தேனி சேவலா? என..!