மலேசியாவிலிருந்து சென்னை வந்த விமானத்தில், பெண் பயணி ஒருவர் கொடிய விஷம் உடைய பாம்புகளை (poisonous snakes), கூடைகளுக்குள் வைத்து கடத்தி வந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
கோலாலம்பூரில் இருந்து, ஏர் ஏசியா விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் இரண்டு பெரிய பிளாஸ்டிக் கூடைகளில் வைத்து 23 கொடிய விஷம் கொண்ட பாம்புகளை (poisonous snakes) உயிருடன் கொண்டு வந்ததைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த பெண்ணிடம் பாம்புகளை எடுத்து வந்ததற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் வன உயிரின குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், பிடிபட்ட பாம்புகள் அனைத்தும், ஆப்பிரிக்க கண்டத்தில் அடர் காடுகளில் காணப்படும் கொடிய விஷம் உடைய பாம்புகள் என தெரியவந்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பெண் பயணி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கடத்தலின் பின்னணியில் உள்ளவர்கள் யார் யார்? பாம்புகள் கடத்தப்பட்டதன் காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கடத்தி வரப்பட்ட பாம்புகளை ஏர் ஏசியா விமானத்திலேயே மலேசியாவுக்கு திருப்பி அனுப்பவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் நடந்த பகீர் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.