சிவபெருமானுக்குரிய மிக முக்கியமான விரத மற்றும் வழிபாட்டு நாட்களில் ஒன்று பிரதோஷம். பலரும் இந்த நாளில் விரதம் இருந்து சிவனை மனதார வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதமும் திரியோதசி திதியின் மாலை நேரத்தில் வரும் 04.30 முதல் 6 வரையிலான நேரம் பிரதோஷ காலம்.
இந்த நேரத்தில் அனைத்து சிவன் கோவில்களிலும் சிவ பெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது பக்தியுடன் சிவனிடம் என்ன கேட்டாலும் அதை சிவ பெருமான் அருள்வார் என்பது நம்பிக்கை.
பிரதோஷ விரதத்தின் பலன்கள் :
இப்படி தொடர்ந்து 12 பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபடுபவர்களுக்கு செல்வம், சுகம், ஆரோக்கியம் போன்ற அனைத்து உலக இன்பங்களையும் பெறலாம் என்பது நம்பிக்கை. எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டு மறுபிறப்பிலிருந்தும் விடுபடலாம் என்பதும் நம்பிக்கை.
பிரதோஷம் காலத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும் சிவன் கோவிலில் வந்து வழிபடுவதாக ஐதீகம். அதனால் அந்த சமயத்தில் சிவனை மனமுருக வேண்டினால், தேவர்கள் முனிவர்கள், சித்தர்கள் உள்ளிட்ட அனைவரின் அருளாசிகளும் நமக்கு கிடைக்கும். அப்படி கிடைப்பதால் வாழ்க்கையில் அனைத்து விதமான நலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் வந்தால் அது பானு பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இப்படி ஞாயிறு முதல் சனி வரை ஒவ்வொரு நாளும் வரும் பிரதோஷத்திற்கு ஒரு பெயரும், பலன்களும் உண்டு. அந்தவகையில் இந்த மாதம் பிரதோஷம் செய்வாய் கிழமையில் வந்துள்ளது. செய்வாய்க்கிழமை வரும் பிரதோஷம் ‘பூம் பிரதோஷம் ‘ என்று அழைக்கப்படுகிறது. இன்று பிரதோஷ விரதம் இருந்தால் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுத்து, வாழ்வில் செழிப்பை உண்டாக்கும்.
பூஜை செய்யும் முறை :
பிரதோஷ பூஜை செய்பவர்கள் சூரிய அஸ்தமனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக குளித்து, பூஜைக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பூஜை சிவபெருமான், பார்வதி தேவி, கார்த்திகைக் கடவுள் மற்றும் விநாயகப் பெருமானை வணங்குவதற்காக செய்யப்படுகிறது.
பூஜையில் சிவலிங்கத்தை பால், நெய் மற்றும் தயிர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். பூஜைக்குப் பிறகு, பிரதோஷ விரதக் கதையைக் கேட்க வேண்டும் அல்லது சிவபுராணத்திலிருந்து கதைகளைப் படிக்க வேண்டும். அதன் பிறகு 108 முறை மகா மிருத்யுஞ்சய மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மாலையில் சிவன் கோவிலுக்குச் சென்று தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.