காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு உட்பட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் இடைத்தேர்தல் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தற்பொழுது அறிவித்துள்ளார் .வரும் ஜனவரி 31ஆம் தேதி ஈரோடு கிழக்கில் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் பிப்ரவரி 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அடுத்த மாதம் பிப்ரவரி 8ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.மேலும் இந்த தாக்கல் செய்த வேட்பு மனுவை வாபஸ் பெற பிப்ரவரி 10ஆம் தேதி இறுதி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம் “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுகிறோம். இடைத் தேர்தலில் பாஜக போட்டியிட்டால் தேசிய கட்சி என்பதன் அடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு ஆதரிப்போம் என தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதாகவும் அறிவித்தார்.
தற்போது ஜி.கே. வாசனை இதுதொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் சந்தித்துப் பேசினார். அதில் தங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என வாசனிடம் அவர் வலியுறுத்தி இருக்கலாம் எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸை சந்தித்துப் பேசவுள்ளதாகவும் ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.