சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத்தை தேர்தல் வாக்குறுதிப்படி முழுமையாக நிறைவேற்றாத தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து ஓ.பி.எஸ் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில் கூறிருப்பதாவது :
தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், “தமிழகத்தில் தற்போது அரசு உதவித் தொகை பெற்று வரும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், ஆதரவற்ற மகளிர், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், திருமணமாகாத 50 வயதிற்கும் மேற்பட்ட பெண்கள், அகதிகளாகத் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகள் உட்பட 32 இலட்சம் பேருக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் உதவித் தொகை 1000 ரூபாய் என்பது 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.” என்று அறிவித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 26 மாதங்கள் கடந்த நிலையில், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத்தை 1,200 ரூபாயாக உயர்த்தியுள்ளது “யானைப் பசிக்கு சோளப்பொறி” என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பத்திரப் பதிவுக் கட்டண உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு என பல்வேறு கட்டண உயர்வுகள் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, காய்கறிகள் விலை உயர்வு, வீட்டு வாடகை உயர்வு என பல்வேறு இன்னல்களுக்கு மக்கள் ஆளாகியிருக்கின்ற நிலையில், விலைவாசி உயர்வு அடிப்படையில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம் குறைந்தபட்சம் 2,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், தி.மு.க. அரசோ 1,200 ரூபாயாக, அதாவது வெறும் 200 ரூபாய் உயர்வை மட்டும் அறிவித்து இருக்கிறது. இது ஏழையெளிய மக்களை ஏமாற்றும் செயல். இது கடும் கண்டனத்திற்குரியது.
தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலையை மட்டும் லிட்டருக்கு. 3 ரூபாய் குறைத்துவிட்டு மவுனமாக இருந்துவிட்டது. இதே முறையைத்தான் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் வழங்கப்படும் ஓய்வூதிய உயர்விலும் தி.மு.க. அரசு கடைபிடித்து இருக்கிறது. அதுவும் ஆட்சிப் பொறுப்பேற்று 26 மாதங்களுக்குப் பிறகு!
இதில் மற்றுமொரு கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலே 32 இலட்சம் பயனாளிகள் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 2023-2024 ஆம் ஆண்டிற்கான சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பின்படி, ஒன்பது சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் 34,62,034 பயனாளிகள் பயன்பெற்று வருகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதே சமயத்தில், தற்போதைய உயர்வின்மூலம் 30 இலட்சம் பேர் பயனடைவார்கள் என்று தி.மு.க. அரசு கூறியுள்ளது. இதன்படி பார்த்தால், பயனாளிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நான்கரை இலட்சம் குறைந்துள்ளது. இந்தக் குறைவிற்குக் காரணம், ஒன்பது
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றிரண்டு திட்டங்கள் இந்த உயர்விலிருந்து விடுபட்டிருக்க வேண்டும் அல்லது தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்திருக்க வேண்டும். எது எப்படியோ, அனைத்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் உதவித் தொகை பெற்றுவரும் அனைவருக்கும் இந்த உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்பது பயனாளிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் ஓய்வூதியம் வழங்கப்படும் ஒன்பது திட்டங்களில், கிட்டத்தட்ட 20 இலட்சம் பேர் பயன்பெறக்கூடிய இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் மற்றும் இந்திரா காந்தி தேசிய கைம்பெண்கள் ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றிற்கு மத்திய அரசின் பங்கும் இருப்பதால், அதிக அளவு நிதிச்சுமை ஏற்படாது என்பதைக் கருத்தில் கொண்டு, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் வழங்கப்படும் ஒய்வூதியத்தை 1,500 ரூபாயாக உயர்த்தி தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.