காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழக பிரதிநிதிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை, நம் மாநில உரிமைகளை அண்டை மாநிலங்களுக்கு தாமாக முன்வந்து நாமே தாரைவார்த்து கொடுப்பதற்கு சமமாகும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது : டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக் கூட்டத்தில் நேரடியாக பங்கேற்கவிருந்த தமிழக பிரதிநிதிகளுக்கு டெல்லி செல்ல தடை விதித்து, ஆன்லைன் வாயிலாக மட்டுமே பங்கேற்க வேண்டும் என தமிழக நீர்வளத்துறை உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைகளை வழங்கும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக்கூட்டத்தின் முக்கியத்துவத்தை முழுமையாக உணராத திமுக அரசு, அக்கூட்டத்திற்கு தமிழக பிரதிநிதிகளை நேரடியாக அனுப்பி மாநிலத்தின் உரிமையை கோராமல், ஆன்லைன் மூலமாக பங்கேற்க வைத்து வேடிக்கை பார்க்க வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இதையும் படிங்க: பெட்ரோல் குண்டு வீச்சு.. திமுக பிரமுகருக்கு தொடர்பு! TTV.தினகரன்!
ஏற்கனவே கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான காவிரி நீரையே இதுவரை முழுமையாக பெற முடியாத சூழலில், தமிழகத்திற்கான நீரை கேட்டுப்பெற வேண்டிய காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழக பிரதிநிதிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை, நம் மாநில உரிமைகளை அண்டை மாநிலங்களுக்கு தாமாக முன்வந்து நாமே தாரைவார்த்து கொடுப்பதற்கு சமமாகும்.
எனவே, காவிரி ஆணையக் கூட்டங்களில் நேரில் பங்கேற்க தமிழக பிரதிநிதிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அதனை உடனடியாக நீக்கி, இனி வரும் காலங்களில் நடைபெறும் காவிரி தொடர்பான அனைத்துக் கூட்டங்களில் தமிழக பிரதிநிதிகளை பங்கேற்கச் செய்து தமிழகத்திற்கான காவிரி நீரை முழுமையாகப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.