டெல்லியில் முதல்வர் மு.க. ஸ்டாலினும், தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் திடீரென சந்தித்து பேசினர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
543 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 293 இடங்களிலும் , காங்கிரஸ் – 232 இடங்களுக்கும் மற்றவை – 18 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
இதையடுத்து பாஜக உடனடியாக மத்தியில் புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்கிடையே இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் நேற்று ஆலோசனை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்று பகல் 1 மணி அளவில் டெல்லி சென்ற அவர் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றார்.
இதையும் படிங்க: 2024 மக்களவைத் தேர்தல் : தோல்வியைத் தழுவிய BJP- வின் Star Candidate!
கூட்டம் முடிந்ததும், சென்னை திரும்ப டெல்லி விமான நிலையத்துக்கு இரவு 8 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் வந்தார். அப்போது, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனையில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்ப விமான நிலையம் வந்திருந்தார். அப்போது இருவரும் நேரில் சந்தித்துக்கொண்டனர்.
அந்த தருணத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து, தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். அதைப்போல மு.க. ஸ்டாலினையும் சந்திரபாபு நாயுடு வாழ்த்தினார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “டெல்லி விமான நிலையத்தில், கருணாநிதியின் நீண்டகால நண்பரான சந்திரபாபு நாயுடுவை சந்தித்தேன்.
அவருக்கு எனது வாழ்த்துகளை கூறியதோடு சகோதர மாநிலங்களான தமிழ்நாடு – ஆந்திர பிரதேசம் இடையேயான நல்லுறவை வலுப்படுத்த இணைந்து செயல்படுவோம் என்ற என் நம்பிக்கையை வெளிப்படுத்தினேன்.
சந்திரபாபு நாயுடு மத்திய அரசில் மிக முக்கியப் பங்காற்றுவார். தென் மாநிலங்களுக்காக வாதாடி, நமது உரிமைகளைப் பாதுகாப்பார் என நம்புகிறேன்” என்று கூறினார்.