காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டதை தொடர்ந்து, ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி பதவியை மக்களவை தலைமை செயலகம் வழங்கியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது மோடி எனும் சமூகப் பெயரை இழிவுபடுத்தும் விதமாக, அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பூர்ணேஷ் மோடி தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த மார்ச் 23ஆம் தேதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதையடுத்து அவர் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை அடுத்து சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைதொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மக்களவை சபாநாயகர் மற்றும் செயலாளரை, நேரில் சந்தித்து ராகுல் காந்தியிடம் இருந்து பறிக்கப்பட்ட எம்.பி. பதவியை விரைந்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் ராகுல் காந்தியை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கீகரித்து, நாடாளுமன்ற செயலாளர் அறிவித்துள்ளார். ராகுல் காந்திக்கு எம்பி பதவி திரும்ப ஒப்படைக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்தில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.
இதேபோன்று மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது ராகுல் காந்தியை பேச வைக்கவும் காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.
ராகுல் காந்திக்கு எம்பி பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இனிப்புக்கள் வழங்கி கொண்டாடி வருகிறனர்.