தமிழ் திரை உலகில் அடுத்தடுத்த திடீர் மரணங்கள் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாகி வரும் நிலையில் பருத்திவீரன் திரைப்பட புகழ் நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி, திரையுலகினர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழில் கிழக்குச் சீமையிலே, மைனா, கந்தசாமி உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் நடித்த ராசு, தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.
தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் செவ்வாழை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் செவ்வாழை என்ற அடைமொழியுடன் செவ்வாழை ராசு என அழைக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தனது 70 வயதில் காலமானார்.
அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள கோரையூத்து கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
காமெடி நடிகர் மயில்சாமி, இயக்குநர் மனோபாலா என அடுத்தடுத்த திரை பிரபலங்களின் திடீர் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத நிலையில், நகைச்சுவை நடிகர் செவ்வாழை ராசு உயிரிழந்துள்ளது திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவிற்கு திரை நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் செய்தியினை பதிவினை வருகின்றனர்.