ஐ தமிழ் நேயர்களுக்கு வணக்கம்
தலைவிதியை மாற்றக்கூடிய சிவத்தலம் திருச்சி அருகே திருப்பட்டூரில் உள்ளது என்பதை அறிவீர்கள்.
அதுபோல, தலைவிதியை மாற்றக்கூடிய வைணவத்தலம் ஒன்று, தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே கஞ்சனூரில் அமைந்திருக்கிறது.
தரிசிக்கலாம் வாருங்கள்..
வலது கை அபய அஸ்தமாகவும் ,இடது கை ‘வா’ என்றழைக்கும் விதமாகவும், தாயாருடன் அமர்ந்த திருக்கோலத்தில், ஆறடி உயரத்தில் காட்சி தரும் மிகவும் அரிதான பழைமை வாய்ந்த பெருமாள் ஆலயம் இதுவாகும்.
தேடி வந்து வணங்குபவர்களை எல்லாம், ‘வா’ என்றழைத்து, வேண்டிய வரங்கள் தருவதால், இத்தலத்துப் பெருமாளுக்கு “வரதராஜபெருமாள்” என்று திருநாமம்.இவர் சுதை ரூபமாக இருப்பதால் திருமஞ்சனங்கள் கிடையாது. தைலக்காப்பு மட்டும்தான் இங்கு நடைபெறுகிறது.
பாரதப்போரில் அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்த கிருஷ்ணனின் பாவம் போக்க, இராஜநாராயணப் பெருமாளாக எழுந்தருளி, கிருஷ்ணனுக்கு காட்சி தந்த தலமும் இதுதான்.
சரி…இத்தலத்தை தரிசித்தால் தலைவிதி மாறிடுமா ? மாறியதற்கு காரணமாக ஒரு கதை உண்டு. கேட்போம்…..
இவ்வூரில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வைணவக் குலத்தில் பிறந்த ஹரதத்தர் என்பார், பிறகு சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டு சைவ மதத்திற்கு மாறினார். இதனை பெரும் குற்றமாக கருதிய இப்பகுதி வைணவர்கள் “ஹரதத்தர் அக்னியில் எரிந்து சாகட்டும்” என்று தண்டனை தந்தார்கள். அவரை இரும்பு நாற்காலியில் பிணைத்து,சுற்றிலும் ஹோமத் தீயை வளர்த்தார்கள். ஆனால் ஹரதத்தர் சிறிதும் கலங்கவில்லை. அருகில் சிவாலயத்தில் வீற்றிருக்கும் கற்பகாம்பாள் சமேத அக்னீஸ்வரரை மனதார பிரார்த்தனை செய்தார்.
அப்போதுதான் அந்த அற்புதம் நடந்தது. ஈசன்,அம்பாள் இருவரும் காட்சி தர,அவர்கள் அனுக்கிரகத்தால், அக்னியிலிருந்து புதுமலர் போல் எழுந்து வந்தார் ஹரதத்தர். இதனைக் கண்ட வைணவர்கள், தங்கள் தவறை உணர்ந்து ஈசனை வணங்கினர். இந்த நிகழ்வின் மூலம் “ஹரியும் சிவனும் ஒன்று” என்பதை உலகிற்கு உணர்த்திய தலமாக இது திகழ்கிறது.இக்கோயிலில் சிவன்,அம்பாள்,ஹரதத்தர் ஆகியோருடன் நரசிம்ம பெருமாளும் சேர்ந்து தனி சந்நதியில் எழுந்தருளியுள்ளனர்.
ஹரதத்தர் இறப்பு உறுதி என்ற நிலையில்,அவரின் தலைவிதியை மாற்றி,உயிருடன் மீட்டெடுத்த தலம் இது என்பதால், இங்கு வந்து வழிபடுவோருக்கும் அவ்வாறே, தலைவிதி மாறும் என்ற மகத்தான நம்பிக்கை, பக்தர்கள் மத்தியில் பரவலாக உள்ளது.
சபரிமலை ஐயப்பனை தரிசிப்பது போலவே, இங்குள்ள ஆஞ்சநேயரை, வேண்டி,மாலை அணிந்து,
27 நாட்கள் விரதம் இருக்கிறார்கள்.அனுமன் ஜெயந்தி நாளன்று, காவிரி ஆற்றிலிருந்து பால்குடம் ஏந்தி வந்து,
ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்து விரதம் முடிக்கிறார்கள். அன்று மாலை இராமர், லட்சுமணர் மற்றும் சீதையுடன் ஆஞ்சநேயர் வீதி உலா நடைபெறுகிறது.
இங்கு அருள்பாலிக்கும் வரதராஜபெருமாள் இதயத்தில், சாம்ராஜ்ய லட்சுமியாக தாயார் வீற்றிருப்பதால், இவளை சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட, தலைவிதியை மாற்றி, வாழ்வில் இழந்ததை எல்லாம் மீட்டுத்தருவாள் என்றும், சகலவிதமான தோஷங்களையும் அகற்றி, சௌபாக்கியங்களை அருள்வாள்” என்றும் விவரிக்கிறார் இராமன் பட்டர்.
சக்திவாய்ந்த ஆலயத்தில் மீண்டும் சந்திப்போம் ஆச்சர்யமூட்டும் செய்திகளோடு ! அதுவரையில்
உங்களிடம் இருந்து விடைபெறுவது ஐ தமிழ்!