“புனித நதியான காவிரி மணலில், ஈசனை வடிவமைத்து இந்திரன் வழிபட்ட தலம் இது !”
பழைமை வாய்ந்த திருத்தலங்களை தொடர்ச்சியாக தரிசித்து வரும்,
ஐ தமிழ்த் தாய் நேயர்களுக்கு பணிவான வணக்கம்.
இரண்டாம் இராஜராஜ சோழனால் எழுப்பப்பட்ட கற்றுளியிலான கோயிலும், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல்பெற்ற தலமும், மயிலாடுதுறை அருகே 4 கிலோ மீட்டர் தொலைவில் நீடூரில் கம்பீரமாய் அமைந்துள்ளதுமான, அருள்மிகு வேயுறுதோளியம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலுக்கு உங்களை அழைத்துச் செல்வதில் ஐ தமிழ்த் தாய் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறது.
தனி கோயில் கொண்டுள்ள ஸ்ரீ வேயுறுதோளியம்மன் வலது புறத்தில், சனீஸ்வரர் நின்ற கோலத்தில் வீற்றிருக்கிறார்.
மூலவர் ஸ்ரீ சோமநாத சுவாமி சந்நதியின் வலது புரத்தில் சந்திரனும், இடதுபுறத்தில் சூரியனும் அமைந்திருக்க, சமயக்குரவர்கள் நால்வர், பாலகணபதி, தட்சிணாமூர்த்தி, முனையிடுவார் நாயனார், சின்மயானந்தா, சப்த மாதர்கள், வள்ளி தெய்வானையுடன் முருகன், அண்ணாமலையார், சிவலோகநாதர் கைலாசநாதர், விஸ்வநாதர், மகாலட்சுமி, பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை, காலபைரவர் என அனைவரும் பிரகாரத்தைச் சுற்றி அழகுற அமைந்து அருள்பாலிக்கிறார்கள்.
“ஒருசமயம் இந்திரன் பூலோகத்திற்கு வந்தபோது, காவிரி ஆற்றின் மணலை அள்ளி, லிங்கமாகப் பிடித்து சிவபூஜை செய்தான்.பின் சிவனாரின் நடன தரிசனம் வேண்டி ஒரு பாடலை பாட,அதில் மகிழ்ந்த சிவன் அவனுக்கு நடனக்காட்சி அருளினார்.
எனவே இவருக்கு “ கானநர்த்தன சங்கரன் ” என்றும் பெயர் உண்டு. “பாடலுக்கு இறங்கி ஆடிய தேவர்” என்பது இதன் பொருள். இந்திரன் வடித்த மணல் லிங்கம் காலவெள்ளத்தில் கரையாமல் அப்படியே இருக்கவே, பிற்காலத்தில் அதனை வைத்து இக்கோயில் எழுப்பப்பட்டது. சுயம்பு மூர்த்தியான இந்த லிங்கத்தில் இந்திரனின் விரல் தடங்கள் பதிந்திருப்பதை இப்போதும் காணலாம்.
தன்மசுதன் எனும் அசுரன் முன்வினைப்பயனால் அடுத்த பிறவியில் நண்டாக பிறந்தான். அவன் தன் பாவங்களுக்கு விமோசனம் பெற நாரதரிடம் ஆலோசனை கேட்டான். அவர், ‘திருநீடூர் சிவனை வழிபட, விமோசனம் கிடைக்கப்பெறும்’ என்றார்.
அதன்படி தன்மசுதன் இங்கு வந்து காவிரி ஆற்றில் நீராடி, சிவனை வழிபட்டான். மணல் லிங்கமாக இருத்த சிவன் அவனுக்குக் காட்சி கொடுத்தார். அவன் தனக்குள் ஐக்கியமாவதற்கு வசதியாக, லிங்கத்தில் துளையையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.நண்டு வடிவில் இருந்த அசுரன், லிங்கத்திற்குள்ளே சென்று ஐக்கியமானான்.
நண்டு வந்து வணங்கியதால் இத்தலத்து ஈசனுக்கு ‘ கற்கடேசுவரர்’ என்ற நாமமும் உண்டு. நண்டு சென்ற துளை தற்போதும் லிங்கத்தில் இருக்கிறது.ஆடி மாத பவுர்ணமி தினத்தில் இங்கு சிவனுக்கு “ கற்கடக பூஜை ” நடக்கிறது. எனவே கடகராசி நேயர்களுக்கு இது பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது” என்கிறது தலவரலாறு.
சந்திரன் இத்தலத்து ஈசனை வணங்கி தவமிருந்து, தான் இழந்த 64 கலைகளையும் திரும்ப பெற்றது இங்குதான். அதுபோல் சூரியனும் அம்பாள் பூஜித்து, சாப விமோசனம் பெற்றதோடு, ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் தன் ஒளி கதிர்களை சுவாமி மீது வைத்து வணங்கிச் செல்லும் அற்புத நிகழ்வும் நடைபெற்று வருகிறது.காளி பூஜித்து சர்வ சக்திப் பெற்று அஷ்டபுஜகாளியாக அருகிலேயே கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள்.
63 நாயன்மார்களில் ஒருவரான முனையிடுவார், போர்க்கலையிலும் வல்லவராகத் திகழ்த்தார். இவர் எந்த மன்னன் அழைப்பை ஏற்று அவனுக்காக போரிடுவாரோ, அவனே வெற்றி பெறுவது அக்காலத்தில் வழக்கமாக இருந்திருக்கிறது.
அதற்கு சன்மானமாக அந்த மன்னன் வாரி வழங்கும் பொன், பொருட்களை கொண்டு வந்து இங்குள்ள ஈசனுக்கு பூஜை செய்வதும், வருவோர்க்கெல்லாம் அன்னதானம் செய்வதும் முனையிடுவாரின் தொண்டாக இருந்திருக்கிறது. அவர் அவதரித்ததும், முக்தி அடைந்ததும் இத்தலத்தில் தான்.
எனவே அவர் முக்தி அடைந்த பங்குனி மாசம் பூச நட்சத்திர நாளன்று, அவரின் நினைவாக குருபூஜை மிகச் சிறப்பாக இன்றும் நடைபெற்று வருகிறது. அந்நாளில் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசித்து அருள் பெறுகிறார்கள்.
“மணல் லிங்கமாக அமைந்த தலங்கள் இன்னும் சில உண்டு. அங்கெல்லாம் அந்த லிங்கத்தின் மேல் கவசம் சாத்தி அதன் மீதுதான் அபிஷேக அர்ச்சனைகள் நடக்கும். ஆனால் இங்கு இந்திரன் அமைத்த லிங்கத்தின் மீது இயல்பாகவே அர்ச்சனைகள் நடக்கின்றன.
இத்தனை காலம் வரை தொடர்ந்து நடைபெற்று வரும் அபிஷேகங்களால் இந்த சிவலிங்கத்திற்கு எவ்வித சிறு குறைபாடும் ஏற்படவில்லை என்பது ஆச்சரியமான உண்மை.தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுவோர், திருமணத்தடை நீங்கவும், புத்திரப்பேறு பெறவும், வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்க பெற இத்தலத்தை வாழ்வில் ஒரு முறையேனும் தரிசிப்பது நலம் பயக்கும்” என்கிறார் சிவசுப்பிரமணிய குருக்கள்.
மிகவும் அரிதான, அழகான இந்த ஆலயத்தை தரிசித்து மகிழ்ந்திருப்பீர்கள் என நம்புகிறோம். மீண்டும் ஓர் தலத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது ஐ தமிழ்த் தாய் !