இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பதன் எதிரொலியாக வரும் 31 ஆம் தேதிக்கு பிறகு விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். மக்கள் புரட்சியின் போது இலங்கை பிரதமராகை இருந்த மகிந்த ராஜபக்சே உள்ளிட்டோரின் வீடுகள் தீவைத்து கொளுத்தபட்டது. இதனிடையே ராஜபக்சே, அவரது மகன் குடும்பம் உட்பட அனைவரும் தப்பித்து வேறு இடத்திற்கு தஞ்சமடைந்தனர்.
இதனையடுத்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். ஆனால் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் என தொடர்ந்து மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையே புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.
இதனை தொடர்ந்து இலங்கையில் பொருளாதார நிலைமையை சரிகட்டுவதற்கான பல்வேறு முயற்சிகளை அந்நாட்டு அரசு செய்து வருகிறது. இந்த நிலையில், எரிபொருள் கையிருப்பு குறைந்துகொண்டே வருவதால் விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் 31 ஆம் தேதிக்கு பிறகு விமானங்கள் இயக்கப்படுவதை முற்றிலுமாக நிறுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.