டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறை ஒன்றில் இன்று காலை 8 மணி அளவில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட போது, பணியாளர்கள் இல்லாத காரணத்தால் யாருக்கும் பாதிப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று காலையில் இந்த வளாகத்தில் உள்ள அறை ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
பாராளுமன்ற வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் இது குறித்து தெரிவிக்கையில், அறை எண் 59ல் காலை 8 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது என்றும் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் பணியாளர்கள் யாரும் அப்பகுதியில் இல்லாத காரணத்தால் யாருக்கும் பாதிப்பில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.