CM Stalin Kodaikanal visit நாடாளுமன்ற தேர்தல் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து ஓய்வு எடுப்பதற்காக தனது மனைவியுடன் கொடைக்கானல் சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின் இன்று மீண்டும் சென்னை புறப்பட்டார்.
தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து கடந்த 29ம் தேதி திங்கள்கிழமை காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் தமிழ்நாடு முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மதுரை வந்தடைந்தனர்.
இது அவரது தனிப்பட்ட வருகை என்பதால், பார்வையாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. முதல்வர் வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன், கொடைக்கானல் பட்லகுண்டு சாலை வழியாக கொடைக்கானல் வந்து, கொடைக்கானல் செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள தாமரா ரிசார்ட்டில் தங்கினார்.
இதையும் படிங்க: ஓய்வு எடுக்க குடும்பத்தோடு கொடைக்கானல் புறப்பட்ட முதலமைச்சர்
அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பிற்காக 1500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் மே 4ம் தேதி வரை ஆளில்லா விமானங்கள் மற்றும் பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.
மே 4ம் தேதி வரை கொடைக்கானலில் முதல்வர் தங்குவார் என அறிவித்திருந்த நிலையில் இன்று மாலை கொடைக்கானலில் இருந்து தனது குடும்பத்துடன் புறப்பட்டார். வரும் வழியில் திடீரென வாகனத்தை நிறுத்திய தமிழ்நாடு முதல்வர், திமுக கட்சித் தொண்டரிடம் திமுக கரை வேட்டியை பெற்றுக் கொண்டு புறப்பட்டார்.
முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானலில் ஓய்வுக்காக சென்றிருந்த நேரத்தில் மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறை, பல்வேறு பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, போதைப் பொருள் நடமாட்டம் என நாளுக்கு நாள் பிரச்சினை அதிகரித்து வந்த நிலையில், முதல்வர் தனது ஓய்வை 1 நாள் முன்னதாகவே முடித்துக் கொண்டு புறப்பட்டதாகக் கூறப்படுகிறது.