மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
மணிப்பூரில் நடைபெற்றுவரும் வன்முறைகள் குறித்து நேரில் கண்டறிவதற்காகவும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காகவும் மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த இந்தியா கூட்டணியின் 21எம்.பிக்கள் கொண்ட குழு ஜூலை 29 ஆம் தேதி அன்று டெல்லியிலிருந்து மணிப்பூரின் தலைநகர் இம்ஃபாலுக்குச் சென்றோம். இதில் விசிக சார்பில் 2 எம்.பிக்களும் அக்குழுவில் இடம் பெற்று மணிப்பூருக்குச் சென்றோம்.
இம்ஃபால் விமான நிலையத்தில் இறங்கியதும், 10 பேர் மற்றும் 11பேர் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சுராசந்த்பூர் சென்றோம். அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள கூகி மக்களைச் சந்தித்தோம். அவர்களின் பாதிப்புகள் மற்றும் கோரிக்கைகளைக் கேட்டறிந்தோம்.
அதன் பின்னர் இம்ஃபாலுக்குத் திரும்பினோம். பின்னர் அங்கிருந்து சாலை வழியாக சுமார் 40 கிமீ பயணம் செய்து பிஷ்ணுபூர் மாவட்டம் மோய்ராங் என்னும் கிராமத்திற்குச் சென்று அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மெய்த்தி மக்களையும் சந்தித்தோம். அவர்களின் பாதிப்புகள் மற்றும் கோரிக்கைகளைக் கேட்டறிந்தோம்.
நிவாரண முகாம்களிலும் இம்ஃபாலில் நாங்கள் தங்கியிருந்த ஓட்டலிலும் இருதரப்பையும் சார்ந்த பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எங்களை சந்தித்து தங்களின் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
29 ஆம் தேதி இரவு இம்பாலில் கிளாசிக் கிராண்ட் ஓட்டலில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் , நாங்கள் பாதிக்கப்பட்ட மக்களிடம் கேட்டறிந்தவற்றை காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கவுரவ் கோகோய் அவர்கள் எடுத்து விளக்கினார்.
30 ஆம் தேதி ஞாயிறு காலை 11.00 மணியளவில் மணிப்பூர் ஆளுநர் அவர்களைச் சந்தித்து எமது குழுவின் கோரிக்கைகள் அடங்கிய மனுவைச் சமர்ப்பித்தோம்.
பாதிக்கப்பட்ட மக்களிடம் கேட்டறிந்தவை மற்றும் பல்வேறு அமைப்பினர் அளித்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டவை ஆகியவற்றிலிருந்து பின்வரும் தகவல்களைப் புரிந்துகொள்ள முடிந்தது:
வன்முறையில் கூகி, மெய்த்தி ஆகிய இரு தரப்பினருமே பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக அளவிலான பாதிப்பு கூகி மக்களுக்கு ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இரு தரப்பினருமே மாநில அரசு மற்றும் இந்திய ஒன்றிய அரசுகளைக் குற்றம் சாட்டுகின்றனர். இதிலிருந்து கூகி சமூக மக்களை மட்டுமின்றி; மெய்த்தி சமூக மக்களையும்கூட மணிப்பூர் மாநில அரசு பாதுகாக்கவில்லை என்பதை அறியமுடிந்தது.
வன்முறை வெறியாட்டம் சுமார் 3 மாதங்களாக நடைபெற்றுவரும் நிலையில் இன்னும் மாநில அரசு அதைக் கட்டுப்படுத்தவில்லை. குறிப்பிட்ட சில நகரங்களில் ஊரடங்கு நிலவுவதால் இடைக்காலமாக ஆங்கே அமைதி நிலவுவதைக் காணமுடிகிறது.
இரு தரப்பிலும் வன்முறைகளின் தன்மை ஒரே விதமாக உள்ளதைக் காணமுடிகிறது. வீடுகளை எரிப்பது, பெண்களைப் பாலியல் ரீதியாகத் தாக்குவது, கூகி மக்களை மெய்த்தி பகுதிகளிலிருந்தும், மெய்த்தி மக்களை கூகி பகுதிகளிலிருந்தும் விரட்டுவது, இதற்கு நவீன ஆயுதங்களைப் பயன்படுத்துவது போன்ற வன்முறை போக்குகளை அறியமுடிகிறது.
கூகி மக்கள் இனி மெய்த்திகளோடு சேர்ந்து வாழ முடியாது. எனவே கூகி பகுதிக்கு ‘ தனி நிர்வாக அமைப்பு’ ( Administrative Set up) வேண்டும் என்கிறார்கள். இதனை 7 பாஜக எம்.எல்.ஏக்கள் உட்பட 10 கூகி எம்.எல்.ஏக்களும் வலியுறுத்துகின்றனர்.
மெய்த்தி தரப்பினரோ அவ்வாறு எந்தவொரு அதிகாரமும் கூகிகளுக்கு கொடுக்கக்கூடாது என்கின்றனர். கூகிகள் எல்லோருமே மியான்மரிலிருந்து வந்த சட்டவிரோதக் குடியேறிகள் என்றும் NRC மூலம் அவர்களைக் கண்டறிந்து உடனே வெளியேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
கூகி மக்களோ தாங்கள் காலம் காலமாக அங்கே வாழ்ந்துவரும் ஆதிவாசிகள் என்கின்றனர். சிறுபான்மையாக மலைப்பகுதிகளில் வாழும் தங்களை மாநில அரசு புறக்கணித்து வருகிறது. அதனால் தங்கள் பகுதிகளில் எந்த வளர்ச்சியும் இல்லை என்கின்றனர். மெய்த்தி பகுதிகளுக்கு இனி போகக்கூட முடியாது. எனவே தனி நிர்வாக அமைப்பு தான் தீர்வு என்கின்றனர். சூராசந்த்பூர் என்ற பெயரைக்கூட இப்போது அழித்துவிட்டு லம்கா ( Lamka ) என்ற பெயரை எழுதி வைத்துள்ளனர்.
மணிப்பூரில் சுமார் 50 ஆயிரம் பட்டியலின மக்கள் (SC) வாழ்கின்றனர். அவர்கள் சார்பில் மூன்றுமுறை எம்.எல்.ஏ ஆக இருந்த பிரேன் என்பவரின் தலைமையில் ஒரு குழு எம்மைச் சந்தித்து மனு அளித்தது. கூகி மக்கள் வாழும் பகுதிகளில் வசிக்கும் எஸ்சி மக்களைத் தங்களின் நிலங்களில் விவசாயம் செய்யவிடாமல் கூகி மக்கள் தடுப்பதாகவும் கொடூரமாகத் தாக்குவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விசிக சார்பில் இந்திய ஒன்றிய கூட்டரசுக்கு யாம் முன்வைக்கும் பரிந்துரைகள் பின்வருமாறு :
- நிவாரண முகாம்களில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. வீடு உள்ளிட்ட அனைத்தையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு அவர்கள் தங்கியுள்ள இடங்களில் குடிநீர், சுகாதாரம், மின்சார விளக்குகள், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- வன்முறையால் இடம் பெயர்ந்துள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களின் படிப்பைத் தொடர உடனடி நடவடிக்கை வேண்டும்.
- இணைய வசதி கடந்த 3 மாதங்களாக முடக்கப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். எனவே, இணைய வசதியை உடனே வழங்க ஆவன செய்ய வேண்டும்.
- கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட அனைவரையும் அடையாளங்கண்டு அவர்களை உடனடியாகக் கைதுசெய்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.
- மாநில அரசின் மெத்தனப் போக்குகளால் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் வன்முறையைத் தடுத்து நிறுத்த இந்திய ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன், இடம் பெயர்ந்தவர்கள் மீண்டும் தம் ஊர்களுக்குச் சென்று பாதுகாப்புடன் வாழக்கூடிய நல்லிணக்கமான சூழ்நிலையை இந்திய ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு ஆகியவை இணைந்து நின்று உருவாக்க வேண்டும்.
- கூகி, மெய்த்தி ஆகிய இருதரப்பினரின் குற்றச்சாட்டுக்கும் ஆளாகியிருக்கும் மணிப்பூர் முதலமைச்சரை மாற்றிவிட்டு ஒரு சார்பில்லாத வேறொருவரை முதல்வராக நியமிக்க வேண்டும்.
- கூகி, மெய்த்தி மக்கள் இனி சேர்ந்து வாழவே முடியாத அளவுக்கு இருதரப்பாருக்குமிடையில் பகைமையும் வெறுப்பும் வலுப்பட்டுள்ளது. எனவே, க்கு மக்களின் கோரிக்கையின் படி அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு தனி நிர்வாக அமைப்பை ( Separate Administrative Setup ) உருக்கி அவர்களுக்கு வழங்கலாமா என்பதை ஆராய குழு ஒன்றை இந்திய ஒன்றிய அரசு நியமிக்க வேண்டும்.
- இந்தியப் பிரதமர் உடனே மணிப்பூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட இரு தரப்பினரையும் சந்தித்து ஆறுதல் கூறவேண்டும்.
- வன்முறையில் வீடுகள் உள்ளிட்ட உடைமைகள் யாவற்றையும் இழந்த இருதரப்பாருக்கும் தனித்தனியே இழப்பு எவ்வளவு என்பதைக் கணக்கெடுப்புச் செய்து அவர்களுக்குப் போதிய இழப்பீட்டை வழங்கவேண்டும்.
இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு மணிப்பூருக்குப் பயணம் செய்யவும், அங்கே பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மேதகு ஆளுநர் ஆகியோரைச் சந்திப்பதற்கும் அனைத்துவிதமான ஏற்பாடுகளையும் சிறப்பான முறையில் செய்து தந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கும், குழுவை வழிநடத்திய நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. ஆதிர் ரஞ்சன் சௌத்ரி அவர்களுக்கும், குழுவில் பங்கேற்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார் .