திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் நேரடியாக இலவச தரிசனத்திற்காக டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுகிறது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் தீர்ந்து போனதால் பக்தர்கள் பலர் அவதிப்பட்டனர். அத்துடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தெரியாத பக்தர்களும் சிரமத்திற்கு உள்ளாகினர். தற்போது இந்தியாவில் கொரோனா குறைந்து வரும் நிலையில் மீண்டும் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை மக்களுக்கு நேரடியாக வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
அதன்படி இன்று முதல் நிவாசம் விடுதி, கோவிந்தராஜர் சத்திரம் மற்றும் பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் தனி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு டிக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது. தினமும் 15 ஆயிரம் இலவச தரிசன டோக்கன் பக்தர்களுக்கு வழங்கப்படும் என்றும் ஆதார் அட்டையை கொண்டு வந்து பக்தர்கள் இந்த வசதிகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.