நடிகை த்ரிஷா குறித்து பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு சம்மன் அனுப்பட்ட நிலையில், அவர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியான நிலையில், மன்சூர் அலிகான் இன்று சுமார் 2:45 மணிக்கு ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார்.
லியோ படத்தில் நடித்த நடிகை த்ரிஷா மற்றும் நடிகை மடோனா செபாஸ்டின் குறித்து சமீபதில் நடிகர் மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோவா சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், நடிகை த்ரிஷா, மன்சூர் அலிகானின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்தார். திரிஷாவின் அந்த சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதையடுத்து, நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவாக நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு உள்ளிட்ட நடிகை, நடிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.
தொடர்ந்து பூதாகரமான இந்த சர்ச்சையில், நடிகர் மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தது.
அந்த பரிந்துரையின்படி, ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் பெண்ணின் நாகரிகத்தை அவமதிக்கும் செயல் செய்தல், பெண்ணின் அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்தனர்.
விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் மன்சூர் அலிகான் வீட்டில் இல்லை என்றும், அவரது செல்போன் எண்ணும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் விசாரணைக்கு ஆஜராக உள்ளதாகவும், முன்ஜாமின் வாங்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததையும் வாபஸ் பெற்று விட்டதாகவும் கூறி தற்போது ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார். மேலும், தலைமறைவாகும் ஆள் நான் இல்லை எனவும் கூறியுள்ளார் மன்சூர் அலிகான்.