Vaiko Tiruchi airport : கூட்டணிக் கட்சிகளுடன் திமுக, அதிமுக, பாஜக மற்றும் தனித்து நிற்கும் நாம் தமிழர் கட்சி என இம்முறை தமிழக தேர்தல் களமானது 4 முனை போட்டியாக இருக்கிறது.
தற்போது வேட்பு மனு தாக்கலும் துவங்கி நடந்து வரும் நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்துமே தங்கள் வேட்பாளர் அறிமுகம், பரப்புரை என பரபரப்பாக காணப்படுகிறது தேர்தல் களம்.
திமுகவை பொறுத்த வரை, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றிற்கு பாண்டிச்சேரி உட்பட 19 தொகுதிகளை தந்து விட்டு தமிழகத்தில் மீதமுள்ள 21 தொகுதிகளில் நேரடியாகவே போட்டியிடுகிறது.
எனவே, அதற்கான தேர்தல் பரப்புரையை இன்று திருச்சியில் துவங்கவிருக்கிறார் ஸ்டாலின். இதற்காக, திருச்சி – சென்னை பை பாஸ் சாலையில் சிறுகனூருக்கு அருகில் ஏற்கனவே திமுக மாநாடு நடந்த அதே திடலில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர் திமுகவினர்.

இதற்காக இன்று மாலை 4.45 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
மேலும் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்துக்கு காரில் செல்லும் முதலமைச்சர் அதன்பிறகு இரவு தஞ்சாவூர் செல்கிறார். அங்கு தனியார் ஹோட்டலில் தங்கும் அவர், நாளை தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டுயிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.
முன்னதாக இன்று (22.03.2024) மாலை திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் (Vaiko Tiruchi airport) பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு, திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து வாக்கு சேகரிக்கிறார்.
இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர். இதற்காக, இன்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு வருகை தந்தார் மதிமுகவின் பொதுச்செயலாளரான வைகோ.
அப்போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஏகாதிபத்தியத்திற்கும், ஜனநாயகத்திற்கும் நடக்கின்ற தர்மயுத்தம் தான் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என இன்று கோஷத்தை வைக்கின்ற இந்துத்துவா சக்திகள்.
இதையும் படிங்க : விருதுநகரில் களம் இறங்கும் கன்னி வேட்பாளர் ராதிகா சரத்குமார்!
சனாதான சக்திகள் கை ஓங்கி விடக்கூடாது என்பதாலேயே ‘இந்தியா’ கூட்டணி வலுவாகவே இருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சியை அனைத்து மாநிலத்திற்கும் முன்மாதிரியாக, எடுத்துக்காட்டாக நடத்தி வருகின்ற மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை இன்று துவங்குகிறார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
மத்தியில் தற்போது ஆட்சியில் உள்ள அவர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தான் டெல்லி முதலமைச்சரை கைது செய்து கொண்டு போனார்கள். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார்கள். இந்துத்துவா அஜண்டாவை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றனர்.
சிஏஏ சட்டத்தை கொண்டு வந்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிமையைக் கூட மறுத்து வருகிறார்கள். பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றார்கள்.
ஆகவே, ஜனநாயகத்திற்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும், சமதர்ம கொள்கைக்கும் நேர்விரோதமாக இருக்கும் ஒரு கூட்டம் இந்தியாவில் பல இடங்களில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் அவர்கள் காலெடுத்து வைக்க முடியாது.
இது பெரியார் பூமி, அறிஞர் கலைஞருடைய பூமி, இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கு உண்மையாக விடுக்கப்பட்ட சவால்” என்று பேசிக் கொண்டே வந்த அவரிடம், “ நேற்று திருச்சிக்கு வந்த திமுக கூட்டணி வேட்பாளரும் தங்கள் மகனுமான துரை வையாபுரி, முதலில் ஸ்ரீரங்கத்தில் சாமி கும்பிட்டு விட்டு,

பின்னர் வெளியில் வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தாரே? அதை எப்படி பார்க்கிறீர்கள்?” என்று நிருபர் ஒருவர் கேள்வி கேட்டார்.
அதற்கு, “நல்லா பார்கிறேன்” என்று டக்கென நகைச்சுவையாக பதிலளித்து விட்டு அங்கிருந்து கிளம்பினார் வைகோ.
“ஏதோ ஒரு சினிமாவுலே வாருவது மாதிரி, ‘இங்கிட்டு ஒரு குத்து, அங்கிட்டு ஒரு குத்து’ அப்படீனு இருக்குப்பா வைகோ பேசுறது” என புலம்பிய படியே கலைந்தனர் நிருபர்கள்.