திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 23-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 1-ம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் திறந்திருக்கும் என அறிவிக்கபட்டுள்ள நிலையில் இலவச டோக்கன் வழங்கப்படவுள்ளது.
மார்கழி மாதத்தில் பெருமாள் ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். திருமலை திருப்பதியில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவிற்கு அடுத்தபடியாக வைகுண்ட ஏகாதசி திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகை தருவார்கள். அந்த வகையில் வரும் 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா தொடங்குகிறது. வைகுண்ட ஏகாதசி அன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் தங்க ரதத்தில் கோயிலின் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து அருள் பாலிக்க உள்ளார்.
இதனை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 23-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 1-ம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் திறந்திருக்கும் என அறிவிக்கபட்டுள்ளது.
இதற்காக திருப்பதியில் 10 இடங்களில் 94 கவுண்டர்களில் 22 ஆம் தேதி முதல் நேர ஒதுக்கீடு இலவச டோக்கன் மொத்தம் 4 லட்சத்து 23 ஆயிரத்து 500 டோக்கன்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் தரிசனம் மூலம் 20 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனம் மூலம் 50 ஆயிரம் பக்தர்களும் வைகுண்ட வாசல் பிரவேசம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச தரிசன டோக்கன்களை ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.