தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற உச்ச நடிகராக வலம் வரும் விஜய்யின் நடிப்பில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தற்போது முழுவீச்சில் உருவாகி வரும் படம் லியோ. இந்த படத்தின் 1st சிங்கள் பாடலான நா ரெடி பாடல் கடந்த ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியானது .
இந்த பாடல் வெளியான 12 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது . தற்போது வரை இந்த பாடலை 28 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் .

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய லியோ படத்திற்கு ராக்ஸ்டார் அனிரூத் இசையமைத்துள்ளார். அனிரூத் மற்றும் விஜய்யின் குரலில் அசல் கோளாறு ராப்பில் மிகப்பெரிய நடனக்குழுவுடன் உருவான இப்பாடல் ஒரு பக்கம் நல்ல வரவேற்பை பெற்றாலும் மறுபக்கம் இந்த பாடலுக்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது .

அந்தவகையில் தற்போது இந்த படத்தின் 1st சிங்கள் பாடலான நா ரெடி பாடல் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் ஒன்று வந்துள்ளது.
போதைப்பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் நா ரெடி பாடல் இருப்பதால் அதை தடை செய்ய வேண்டும் என கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஆர்டிஐ செல்வம் என்ற சமூக ஆர்வலர் ஆன்லைன் வாயிலாக புகார் கொடுத்துள்ளார்.

போதைப்பொருள் புழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் இந்த பாடல் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அவர் நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் .
இந்நிலையில் நா ரெடி பாடலுக்கு தடைவிதிக்க கோரி ஆன்லைன் மூலம் வந்த புகாரால் தற்போது தளபதியின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் . மேலும் இந்த புகார் குறித்து விரைவில் படக்குழு விளக்கம் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .