நடிகை நிலா சினிமாவில் குளியல் காட்சியில் நடிக்க 12,000 லிட்டர் மினரல் வாட்டர் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் தமிழில் கடந்த 2005ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான அன்பே ஆருயிரே படம் மூலமாக நிலா என்ற பெயரில் அறிமுகமானவர் நடிகை நிலா.
முதல் படத்தின் வரவேற்புக்குப் பிறகு நிலாவுக்கு தமிழில் ஜாம்பவான், லீ, மருதமலை, காளை, ஜகன்மோகினி உள்ளிட்ட படங்களில் நடிக்க வாய்பு வந்தது. இவற்றில் மருதமலை படத்திற்கு மட்டுமே ஓரளவு வரவேற்பு கிடைத்தது.
எஸ்.ஜே.சூர்யா கடைசியாக இயக்கிய படமான ‘இசை’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். தொடர்ந்து ‘கில்லாடி’ படத்தில் நடித்த பிறகு தமிழில் அவர் நடிக்கவில்லை. இந்த சூழலில் ஜாம்பவான் படத்தில் நடித்த போது குளியல் காட்சி ஒன்றில் நடிக்க நிலா 12,000 லிட்டர் மினரல் வாட்டர் கேட்டு பிரச்னை செய்ததாக அந்தப் படத்தின் இயக்குநர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் நந்தகுமார் அளித்துள்ள பேட்டியில், “ஜாம்பவான் படத்தில் உள்ள ஒரு காட்சியை குற்றாலத்தில் எடுத்த போது குற்றாலத்திற்கு கீழே 12,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் நிலாவும் அவரது தோழிகளும் குளிப்பது போலவும், பிரசாந்த் அங்கு வந்ததும் தோழிகள் ஓடிவிட நிலா அந்த தொட்டிக்குள் முங்குவது போலவும் எடுக்க வேண்டியிருந்தது.
அந்தக் காட்சி எடுக்க அவரிடம் இதை கூறிய போது இந்தத் தண்ணியில் நான் குளிக்க மாட்டேன். ஒன்று ஷவரில் குளிப்பேன். அப்படி இங்கு குளிக்க வேண்டுமென்றால் இந்தத் தொட்டியில் மினரல் வாட்டரை நிரப்புங்கள் என கூறினார். அதற்கு நான் 12,000 லிட்டர் மினரல் வாட்டர் வேண்டும் என்றால் தயாரிப்பாளர் நிலை என்னவாகும். இது அவரது முதல் படம் என்று கூறினேன்.
ஆனால் அதற்கு நிலா ஒத்துக்கொள்ளாமல் ஷூட்டிங்கிலிருந்து பாதியில் கிளம்பிவிட்டார். அதோடு நில்லாமல் மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது, ஜாம்பவான் பட தயாரிப்பாளர் என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் எனவும் பொய் குற்றச்சாட்டையும் வைத்துவிட்டார்.
அதன் பிறகு எஸ்.ஜே.சூர்யா மற்றும் தியாகராஜன் ஆகியோர் நிலாவிடம் பேசியதை அடுத்து நிலா, நான் இனி இந்தியாவுக்குள் நடிக்கமாட்டேன் பாங்காக்கில் வேண்டுமென்றால் நடிக்கிறேன் என கண்டிஷன் போட்டார். இதனால்,பாங்காக்கிற்கு சென்று அந்தக் காட்சியை எடுத்தோம்” என்று கூறியுள்ளார்.