Uchinimakali temple : முன்பொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பெரிய யுத்தம் நடந்த போது இரண்டு பக்கமும் நிறைய பேர் இறந்தனர்.
தேவர்கள் ஏராளமாக இறந்தபோது கவலை கொண்ட இந்திரன் விஷ்ணுவிடம் தேவர்களை காப்பாற்றும்படிக் கேட்டார். அப்போது விஷ்ணு பாற்கடலைக் கடைந்தால் அமுதம் கிடைக்கும். அதைக் குடித்தால் சாவே கிடையாது எனக் கூறினார்.
இது அசுரர்களின் காதுகளுக்கும் கேட்டுவிட்டதால், தேவர்கள் மட்டும் பாற்கடலைக் கடைய முடியாது, அசுரர்களும் சேர்ந்துதான் அதைச் செய்ய முடியும் என்ற நிலையில் தேவர்கள் அசுரர்களின் உதவியை நாடினார்கள்.
அதற்க்கு அசுரர்களும் ஒப்புக்கொள்ளவே இரண்டு பக்கத்தாரும் ஒருநாள் பாற்கடலைக் கடைய சம்மதித்தார்கள். இதற்காக மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப் பாம்பை நாணாக்கி பாற்கடலை கடையும் போது கடலிலிருந்து பலவகையான பொருட்கள் வெளிவந்தன.
காமதேனு, வச்சிராயுதம், கற்பக விருட்சம் என்று பல தூய பொருட்கள் வந்தது. கடைசியில் ஆலகால விஷம் வந்தது. அவ்விஷம் மூவுலகையும் எரிக்கும் தன்மை கொண்டது என்பதால் அதைப் பார்த்து எல்லோரும் பயந்தார்கள்.
அது நிலத்தில் விழக்கூடாது என தேவர்கள் பயந்தனர். அப்போது சிவன் உலக நன்மைக்காக அந்த விஷத்தை எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டார்.
அதைக் கண்ட பார்வதி சிவனைத் தடுத்தும் சிவன் பார்வதியின் செய்கையைப் பொருள்படுத்தவில்லை. இதனால் பார்வதி தேவி கோபப்பட்டு சிவனின் உச்சியில் அடித்தாள்.
அப்போதுதான் சிவன் தலையிலிருந்து உச்சினிமாகாளி பிறந்தாள்.
சிவன் தலையில் பிறந்த காளியை உச்சினி மாகாளி என அழைத்தனர். பார்வதி அவளைத் தன் மகளாகப் பாவித்து அவளுக்கு வாந்திபேதி, பெரியம்மை, சின்னம்மை, வலிப்பு ஆகிய வியாதிகளை உண்டாக்கும் சக்தியைக் கொடுத்தாள்.
மேலும் நிறைய வரங்களையும் பார்வதி தேவி உச்சினி மாகாளிக்கு கொடுத்தாள்.
அந்த வரங்கள் பின்வருமாறு :
உன்னை வணங்குபவர்களுக்கு வெப்ப நோய்கள் வராது.
உன்னை நினைத்தால் நோய் குணமாகும் என வரம் கொடுத்தாள்.
அதுமட்டுமல்லாமல் உச்சினிக்குத் துணையாக பச்சை வேதாளம், கறுப்பன், மோகினி ஆகிய பிசாசுக் கூட்டங்களையும் படைத்தாள் பார்வதி தேவி.
வரங்களை பெற்ற பிறகு கயிலையை விட்டுப் புறப்பட்டு விக்கிரமாதித்தனின் நாட்டுக்கு வந்த உச்சினி ஒரு பெரிய மலையின் உச்சியில் தங்கினாள்.
ஒருநாள் அந்த மலைக்கு விக்கிரமாதித்தனும் பட்டியும் வேட்டையாட வந்தார்கள். அவர்கள் அங்கு விலங்குகளை வேட்டையாடி பின்னர் விக்கிரமாதித்தியன் களைத்துப் போனான். ஒரு மரத்தடியில் அமர்ந்த அவன் மந்திரி பட்டியிடம் தம்பி தாகமாயிருக்கிறது தண்ணீர் வேண்டும் எப்படியாவது கொண்டு வா என்றான்.
உடனே பட்டியும் காட்டுக்குள் சென்று பல இடங்களில் தண்ணீர் தேடி அலைந்து கடைசியில் ஒரு சுனையைக் கண்டுபிடித்து தண்ணீர் கோரிய போது அந்தப் பகுதியில் தெய்வீக மணம் கமழுவதைக் கண்டான்.
இதையும் படிங்க : உச்சி நாதர் கோவில்-சிவபுரி – ஸ்தல வரலாறு!
அந்தச் சுனையின் கரையில் உச்சினிமாகாளி வீற்றிருந்தது அவனுக்குத் தெரியவில்லை. சுனையிலிருந்து தண்ணீரைக் கோரி கொண்டுபோய் விக்கிரமாதித்தனிடம் கொடுத்தான் பட்டி. அந்த நீரைக் குடித்ததும் விக்கிரமாதித்தியன் உடம்பு புத்துணர்ச்சி அடைந்தது.
உலகத்தையே மறந்து உறஙகினான் விக்கிரமாதித்தன். அவன் கனவில் உச்சினிமாகாளி வந்து அந்தச் சுனையின் அருகே தான் இருப்பதை உணர்த்தி எனக்கு இங்கு ஒரு கோவில் கட்டுவாய் என்று கூறினாள்.
உடனே விக்ரமாதித்ய மன்னன் கனவு கலைந்தது. தான் கண்ட அற்புதக் கனவைப் பற்றி பட்டியிடம் கூறினான். மன்னனின் ஆசைப்படியே அந்த இடத்தில் பெரிய கோவிலைக் கட்டி உச்சினிமாகாளியை அங்கு பிரதிஷ்டை செய்தான் பட்டி.
கோவிலுக்கு ஏராளமான தங்கக் கட்டிகளையும், ஆபரணங்களையும் அளித்தான். அவையெல்லாம் அக்கோவிலிலேயே பல இடங்களில் புதைத்து பாதுகாத்து வைக்கப்பட்டன.
ஆனால், அதன் பிறகு ஏராளமான ஆண்டுகள் ஓடிய பின்பு உச்சினி மாகாளி கோவில் பாழடைந்து சிதைந்து கிடந்தது. அங்கு பூசை செய்ய ஆளில்லை Uchinimakali temple.
அப்போது தான் ஒருநாள் அந்தக் கோவிலுக்கு அயோத்திப் பட்டிணத்திலிருந்து பிராமணன் ஒருவன் வந்தான். அவன் கனவில் உச்சினிமாகாளி வந்து ‘என் கோவிலுக்கு வா’ என அழைத்ததால் தான் அவனும் இங்கு வந்தான்.
அவனை உச்சினி கோவிலின் தர்மகர்த்தாக்கள் கோவிலின் பூசாரியாக நியமித்து, கோவிலையும் சரி செய்தார்கள். அவனும் மூன்றுவேளைப் பூசையைப் பக்தியோடு செய்ய ஒப்புக்கொண்டு பூசை செய்து வந்தான்.
பூசாரிக்கு ஏழு பெண் மகள்கள் இருந்தனர். திருமண வயதை எட்டியிருந்த அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைக்க வசதியில்லை. ஒவ்வொரு நாளும் மகள்களுக்கு திருமணம் செய்ய உதவி செய் என உருகி வேண்டிக் கொள்ளுவான்.
ஒருநாள் காளி அவன் கனவில் தோன்றி கோவிலின் ஒரு இடத்தில் தங்கக் கட்டி இருக்கிறது. எடுத்துக்கொள். என்றாள்.
கனவில் கண்ட இடத்திற்குச் சென்று மண்ணைத் தோண்டிய போது தங்கக்கட்டி கிடைத்தது. அதை எடுத்துக்கொண்டு பக்கத்து நகரத்துக்குச் சென்று விற்று பணத்தை வைத்து மகளுக்கு திருமணம் நடத்த வேண்டும் என நினைத்தான்.
அப்போது வெள்ளைக்கார அதிகாரி ஒருவன் பிராமணனைப் பார்த்து உன் பையைக் காட்டு என சோதனை செய்த போது பிராமணனின் கையில் இருந்த பையில் நிறைய தங்கக் கட்டிகள் இருப்பதைப் பார்த்தான்.
அவன் திருடனோ என்று நினைத்து பிராமணனை அடித்துத் துன்புறுத்தி தங்கம் எப்படி கிடைத்தது எண்டு கேட்ட போது நம்பியான் அழுதபடி நடந்ததைக் கூறினான்.
உடனே வெள்ளைக்காரன் அதை சோதனை செய்ய நம்பியானை கோவிலுக்கு அழைத்துச் சென்று அங்கே தோண்டத் தோண்ட ஏராளமான தங்கம் வந்தது
அங்கே இருந்த எல்லா தங்கத்தையும் எடுத்துக் கொள்ள வெள்ளைக்காரன் ஆசைப்பட்டு வீரர்களைக் கோவிலைத் தோண்டி சோதனை செய்யுமாறு ஆணை இட்டான்.
அப்போது உச்சினி காளி பேய்ப் படைகளை வெள்ளைக் காரர்களின் மேல் ஏவியதால் அவை மாயமாய் நின்று கொண்டு அவர்கள் மீது கற்களை வீசி எறிந்தன. வெள்ளைகார அதிகாரியும் படைகளும் அங்கிருந்து அஞ்சி அலறி கோவிலை விட்டு ஓடி விட்டார்கள்.
500 வருடங்கள் பழைமையான இந்த கோவிலில் இருக்கும் உச்சினி காளி இன்றளவும் தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு கேட்ட வரத்தை அளித்து வருகிறாள் Uchinimakali temple.
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரகேரளம்புதூர் என்ற ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது.