திருச்செந்தூர் முருகன் கோயில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிற நவம்பர் 18ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா வரும் நவம்பர் 13-ம் தேதி தொடங்க உள்ளது.
இதையடுத்து வருகிற 18-ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. சூரசம்ஹாரத்தை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
எனவே, வருகிற 18-ம் தேதி கந்த சஷ்டி திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் வருகிற 18-ம் தேதி சனிக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
எனினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இந்த விடுமுறை பொருந்தாது. இது செலாவணி முறி சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் அல்ல என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிசம்பர் மாதம் 9ம் தேதி சனிக்கிழமை தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.