சமூக வலைத்தளங்கள்ல திரும்பின பக்கமெல்லாம், “சிலர் பாக்க பூனை மாதிரி இருப்பாங்க.. திடீர்னு புலியா மாரிடுவாங்கண்ணும்; ஓரளவுக்கு மேல் நம்மகிட்ட பேச்சு கிடையாது… வீச்சு தான்” ன்னும் ஜெயிலர் பட டிரைலர் பேச்சு தான்.
சரி டிரைலர்ல நாம நோட் பண்ணின சில விஷயங்களை வச்சு, கதை எப்படி இருக்குன்னு ஒரு Decoding பண்ணுவோம்…
முதலில் ரஜினிகாந்தின் கேரக்டர் பொறுத்தவரை, டைகர் முத்துவேல் பாண்டியன் என்ற பெயரில் ஒரு டெரர்ரான ஜெயிலராகவும், மறுபக்கம் சாந்தமான ஒரு சீனியர் சிட்டிஸனாக, ஒரு அப்பாவாக, தாத்தாவாக ரோல் பிளே செய்துள்ளார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு மன நோய் இருக்கின்ற போர்வையில் அவர் இந்த 2 கேரக்டரையும் செய்துள்ளார் என்றும் வைத்துக் கொள்ளலாம்.

ஆரம்பத்தில் வரும் வசனங்களைப் போல குடும்பத்துடன் இருக்கும்போது பூனையாக இருக்கும் ரஜினி, குடும்பத்தை தாண்டி வெளிய ஒரு புலியாக இருக்கிறார். அதேபோல, இந்த பூனை, ஒரு பூனையா இருக்குறதுக்கு முன்னாடியே ஒரு புலியாகவும் இருந்துள்ளது, அதாவது கிட்டத்தட்ட பாட்ஷா படத்தில் இருந்த மாதிரி. அங்கு, மாணிக் பாட்ஸா டூ மாணிக்கம்… இங்கு டைகர் முத்துவேல் பாண்டியன் டூ முத்துவேல் பாண்டியன். அப்போ, இதிலும் பாட்ஷா படத்தின் காப்பி இருக்கா..?
சரி, டிரைலரின் போக்கில், கதைய கணிக்கலாமா…? ஓபன் பண்ணுனா, ஒரு ஹெலிகேம் ஷாட்டில் பாலைவனத்தில் ஒரு அட்டாக். ஏற்கனவே ஒரு கமேண்டர் லுக்கில் சூப்பர் ஸ்டாரை காட்டியுள்ளனர். அந்த வகையில் ஒரு வேளை அவரின் கமெண்டிங்கில் அந்த அட்டாக்கிங் நடத்தப்படலாமோ என்று எதிர்பார்க்கலாம். அல்லது அவரின் டீம் தாக்கப்படலாம். அடுத்து அப்படியே பார்த்தால் வீட்டில் ஒரு பொறுப்பான அப்பா, தாத்தா… இது மூலமாக கொஞ்சம் குடும்ப செண்டிமெண்ட்க்கு இடம் ஒதுக்கியுள்ளார் நெல்சன். அதுவும் கொஞ்சம் அவருடைய பாணியில் காமெடியும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

அடுத்து வரும் ஒரு சண்டை காட்சி அவரின் வீட்டிலேயே நடக்கிறது அதுவும் ஒரு இரவு நேரத்தில். கிட்டத்தட்ட அதே சினாரியோவில் ரம்யா கிருஷ்ணனும், மிர்னா மேனனும் பயப்படுகிற மாதிரியான் சீன் அமைந்துள்ளது. அது மூலமாக, தன்னுடைய குடும்பத்தை தாக்க வரும் தன் எதிரிகளிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றுகிறார் என தெரிகிறது. ஒருவேளை அப்போது தான் அவரின் டெர்ரர் முகம் குடும்பத்துக்கே தெரிய வருகிறது போல… ஏனென்றால், ரம்யா கிருஷ்ணனின் டையலாக்கும் அந்த சீனில் இருப்பவர்களின் ரியாக்க்ஷனும் அப்படி தான் இருக்கிறது.

நடிகர் விநாயகன் வில்லன் கேரக்டரில் மிரட்டியுள்ளார். அதில் அவருடைய வசனங்கள்ளில் மலையாளம் கலந்துள்ளது. அது மூலமாக படத்தின் கதை கேரளா பக்கமும் போகும் என தெரிகிறது. அவருக்கு ஒரு பெரிய ரவுடி போல இருக்க ஜாக்கி ஷ்ராவ் இருக்கும் இடத்தையும், அவரின் தோற்றத்தையும் பார்க்கும்போது நார்த் இந்தியாவில் இருப்பது போல காட்டியுள்ளனர். குறிப்பாக ஒரு ஷாட்டில் ரஜினியின் பின் பக்க பலமாக வரும் டீம்மில் பெரும்பாலானோர் ‘சிங்’குகளாக இருக்கிறார்கள். அதை வைத்து பாக்கும்போது படம் பஞ்சாப்பில் டிராவல் ஆகிறது. ஆகவே, படம் வட இந்தியா, தென் இந்தியா என்று செல்கிறது.
இதற்கு இடையில், வரும் சண்டை காட்சிகள் மற்றும் “ஓரளவுக்கு மேல் நம்மகிட்ட பேச்சு கிடையாது… வீச்சு தான்” “ரொம்ப தூரம் போயிட்டேன், ஃபுல்லா முடிச்சிட்டு தான் திரும்பி வரணும்” மாதிரியான வசனங்கள் மாஸாக மனதில் நிற்கிறது.

ஒரு சொல்ல வேண்டும் என்றால், சாந்தமான ஹீரோவாக குடும்பத்தை காக்கும் மாஜி.. மாஸ் ஹீரோவோட கதை என்று சொல்லலாம். டிரைலரில் கவனிக்கத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால், மோகன்லால், தமன்னா, கன்னட நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்டோரின் கேரக்டர்களை ரிவீல் பண்ணவில்லை… அதை வைத்து பார்க்கும் போது, அவர்களுக்கென்று தனி ஷோக்கேஸ் வீடியோஸ் வரும் என்று எதிர்பார்க்கலாம். யோகி பாபு, வசந்த் ரவி, குட்டி பையன் ரித்விக், மிர்னா மேனன் உள்ளிட்டோர் தங்களின் பங்குகளை சிறப்பாக செய்துள்ளனர் என நம்புவோம்.
இது எல்லாவற்றுக்கும் மேல் அனிருத்தின் பிஜிஎம்-மும் , பாட்டும் சும்மா அதிர வைத்துள்ளது. காட்சிகளுக்கு வலுவும் சேர்துள்ளது.

இதில் கொஞ்சம் விமர்சிக்கும் படியான கருத்தாக இருப்பது, டிரைலரில் கொஞ்சம் பீஸ்ட் சாயல் அடிக்கிறது என்பது தான். டிரைலரின் போக்கு அப்படி தான் உணர வைக்கிறது. மற்றபடி, இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு ட்ரீட் ஆக இருக்கும் என நம்பலாம். ஆகஸ்ட் 10 ஒரு சிறப்பான சம்பவத்தை நிகழ்த்த நெல்சன் தயாராக இருக்கிறார்.. சம்பவம் சிறப்பா இருக்க போகுதா? இல்லை புஷ்வாணம் ஆகப்போகுதான்னு பொறுத்திருந்து பார்க்கலாம்.